(File photo)
நாரஹேன்பிட்டி இராணுவ மருத்துவமனையின் தடுப்பூசி மையத்தில் இன்று (25) காலை பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பல்கலைக்கழகங்களை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் இன்று (25) காலை நாரஹேன்பிட்ட இராணுவ மருத்துவமனைக்கு மொடர்னா தடுப்பூசியை பெற்றுக் கொள்ளும் எதிர்பார்ப்புடன் வருகை தந்திருந்தனர்.
எனினும் இந்த மையத்தில் தடுப்பூசி வழங்கப்படாது என்று இராணுவ மருத்துவமனையின் அதிகாரி ஒருவர் தெரிவித்ததையடுத்து இந்த பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் களனி பல்கலைக்கழகத்தில் வெளியிட்ட கடிதத்தில், மொடர்னா தடுப்பூசி இன்றும் நாளையும் (25,26) மாலை 4 மணி வரை இராணுவ மருத்துவமனையில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்ததாக மாணவர்கள் கூறினர்.
களனி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரின் பெயரை குறிப்பிட்டு வெளியிடப்பட்ட குறித்த கடிதத்தில் மாணவர் அடையாள அட்டையை காண்பித்து தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளதாக மணவர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு நேற்றைய தினம் இராணுவ மருத்துவமனையில் எதன் அடிப்படையில் மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டது எனவும் மாணவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதனிடையே, வெளிநாடுகளுக்கு பயணிக்க உள்ள மாணவர்களுக்கு நேற்றைய தினம் மொடர்னா தடுப்பூசி போடப்பட்டதாக இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.