இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் மற்றும் இந்தோனேசிய வெளியுறவு அமைச்சர் ரெட்னோ லெஸ்டாரி பிரியன்சரி மர்சுடி ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்தோனேசிய வெளியுறவு அமைச்சர் ரெட்னோ லெஸ்டாரி பிரியன்சரி மர்சுடி நியூயோர்க்கில் உள்ள இந்தோனேசியத் தூதரகத்திற்கு இலங்கை வெளியுறவு அமைச்சரை வரவேற்று, கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு பிரச்சினைகள் இல்லை என்பதால் பொருளாதார ஒத்துழைப்பில் விஷேட கவனம் செலுத்தி இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக வர்த்தக ஒப்பந்தங்களை தீர்மானிப்பதிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அணிசேரா இயக்கத்தின் உறுப்பினர்களாக இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் மிக முக்கியமானவை என அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாதம் மற்றும் கடல்சார் குற்றங்களை எதிர்கொள்வது தொடர்பாக பாதுகாப்பு, உளவுத்துறைப் பகிர்வு மற்றும் ஊழியர் மட்ட ஆலோசனைகளிலான இந்தோனேசிய ஒத்துழைப்பை அமைச்சர் பீரிஸ் பாராட்டியுள்ளார்.