
கெரவலபிட்டிய மின் உற்பத்தி நிலைய உடன்படிக்கை குறித்து ஆளுந் தரப்புக்குள் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில், பிரதமர் தலைமையில் ஆளுந்தரப்பு பங்காளிக்கட்சிகள் மற்றும் நிதி அமைச்சர் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதும் இரு தரப்பினருக்கும் இடையே கருத்து முரண்பாடுகளே ஏற்பட்டுள்ளன.
கெரவலபிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் யுகதணவி நிலைய பங்குகளில் திறைசேரிக்கு சொந்தமான பங்குகளில் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரம் கைச்சாத்திடப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ள நிலையில், ஆளுந்தரப்பு பங்காளிக்கட்சிகள் இடையே இது மிகப்பெரிய முரண்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்த உடன்படிக்கையை மேற்கொள்ள அமைச்சரவை பத்திரம் கடந்த வாரத்திற்கு முதல் வாரம் கூடிய அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், அமைச்சரவை அனுமதி இல்லாது இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறித்து ஆளுந்தரப்பு பங்காளிக்கட்சிகள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.
இந்நிலையிலேயே பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் தலைமையில் கெரவலபிட்டிய மின் உற்பத்தி நிலைய ஒப்பந்தத்தில் நேரடியாக தொடர்புபட்டுள்ள நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ மற்றும் அவரது தரப்பினரும், ஒப்பந்தத்தை எதிர்க்கும் ஆளுந்தரப்பு பங்காளிக்கட்சிகளும் அலரிமாளிகையில் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர்.
பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்ட வேளையில் இருந்தே இரு தரப்பினரும் முரண்பாட்டுக் கருத்துக்களையே முன்வைத்துள்ளனர்.எனினும் இந்த ஒப்பந்தம் குறித்தும் அதனால் இலங்கைக்கு கிடைக்கும் சாதக நிலைமைகள் குறித்தும் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ விரிவான விளக்கமொன்றை கொடுத்துள்ளார். எவ்வாறு இருப்பினும் அமைச்சரவையில் அனுமதி பெறாது நள்ளிரவு வேளையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்து பங்காளிக்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.எனினும் அது குறித்து தெளிவான விளக்கம் எதனையும் நிதி அமைச்சர் வழங்கவில்லை என பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்