உள்ளக பொறிமுறைகள் மூலமாக பொறுப்புக்கூறல் முன்னெடுக்கப்படும் என்றால் அதற்காக அரசாங்கம் 12 வருட காலத்தை கடத்தியிருக்க வேண்டிய அவசியம் இல்லை.யுத்தம் முடிவுக்கு வந்த இரண்டு ஆண்டுகளில் உள்ளக பொறிமுறைகளை கையாண்டு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுத்திருக்க முடியும்.ஏன் அவ்வாறான எந்த முயற்சிகளையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
ஜனாதிபதியினதும் அரசாங்கத்தினதும் பொய்யான வாக்குறுதிகளை நம்பி கால அவகாசங்களை வழங்காது பொறுப்புக்கூறல் விடயங்களை வலுவாக்கும் காத்திரமான தீர்மானம் ஒன்றினை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்னெடுக்கும் நகர்வுகளை சர்வதேசம் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ உரையாற்றியுள்ள நிலையில், உள்ளக பொறிமுறை மூலமாக பொறுப்புக் கூறல் மற்றும் ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வுகளை எட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும், அபிவிருத்தி வேலைத் திட்டங்களில் சர்வதேச ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ள நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு என்னவென்பதை தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக அவர்களின் பழைய பல்லவியை பாடிக்கொண்டுள்ளனரே தவிர, பொறுப்புக் கூறல் விடயத்தில் ஆரோக்கியமான அதேபோல் நம்பத்தகுந்த எந்தவொரு நகர்வுகளையும் முன்னெடுப்பதாக எமக்கு தெரியவில்லை. யுத்தத்தின் போதும் யுத்தத்திற்கு பின்னரும் பொறுப்புக் கூறல் விடயங்களிலும், நல்லிணக்க செயற்பாடுகளிலும், அபிவிருத்தி விடயங்களிலும் முன்னெடுக்க வேண்டிய தீர்வுகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையும், ஐக்கிய நாடுகள் பொதுச்சபையும், சர்வதேச சமூகமும் தொடர்ச்சியாக வலியுறுத்திக் கொண்டுள்ள நிலையிலும், காத்திரமான தீர்மானங்கள் எதிர்பார்க்கப்படுகின்ற சூழ்நிலையிலும் இலங்கை அரசாங்கம் இன்னமும் அவர்களின் பழைய கதைகளையே கூறிக் கொண்டுள்ளனர்.
உள்ளக பொறிமுறைகள் மூலமாக தீர்வுகளை பெற்றுக் கொடுப்போம் என அரசாங்கம் கூறுகின்றது என்றால் அதற்கு 12 வருட காலத்தை கடத்தியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. யுத்தம் முடிவுக்கு வந்த இரண்டு ஆண்டுகளிலேயே உள்ளக பொறிமுறைகளை கையாண்டு சுயாதீனமாக ஒரு விசாரணையை முன்னெடுத்து, பாதிக்கப்பட்ட தரப்பிற்கு நீதியை பெற்றுக் கொடுக்க சுயாதீன உள்ளக நிறுவனங்களை உருவாக்கி தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொடுத்திருக்க முடியும்.ஏன் அவ்வாறான எந்த முயற்சிகளையும் அரசாங்கம் எடுக்கவில்லை என்பதே எமது கேள்வியாகும்.
யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு அடுத்த இரண்டு ஆண்டுகளில் எந்தவிதமான முன்னேற்ற செயற்பாடுகளையும் அரசாங்கம் முன்னெடுக்காது, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நலன்களை கருத்தில் கொள்ளாது அவர்களுக்கான நீதியை பெற்றுக் கொடுக்க பின்வாங்கிய காரணத்தினால் தான் 2012 ஆம் ஆண்டில் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளும் நிலைமை ஏற்பட்டது.
அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சர்வதேசத்தை ஏமாற்ற பல்வேறு வாக்குறுதிகளை வழங்கினார். பொறுப்புக் கூறலை முன்னெடுப்பதாகவும், அரசியல் தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதாகவும் வாக்குறுதிகளை வழங்கினார்.ஆனால் அவரது ஜனாதிபதி ஆட்சிக்காலம் முடியும் வரையில் எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை. இப்போது அவரது சகோதரர் கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதியாக ஆட்சி புரிகின்ற நிலையில், 12 ஆண்டுகளின் பின்னரும் அதே வாக்குறுதிகளையே கொடுத்து வருகின்றனர்.ஆகவே முற்று முழுதாக இது சர்வதேசத்தை ஏமாற்றும் நாடகமாகவே நாம் பார்க்கின்றோம்.
ஆகவே தற்பொழுது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஆற்றியுள்ள உரையும் வெறுமனே சர்வதேசத்தை சமாளிக்கவும், மக்களை ஏமாற்றவும் கூறும் பழைய பல்லவி என்பதுடன், ஜனாதிபதியின் உரையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையாக நிராகரிக்கின்றது.அதேபோல் சர்வதேச சமூகத்திடம் நாம் கேட்டுக் கொள்வது என்னவென்றால்,இவ்வாறான ஒரு சூழ்நிலையில் இனியும் அரசாங்கத்தின் சமாளிப்புக் கருத்துக்களை நம்பி கால அவகாசங்களை வழங்கிக் கொண்டு இருக்காது தமிழ் மக்களின் பொறுப்புக் கூறல் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளை வலுவாக முன்னெடுக்கும் காத்திரமான தீர்மானம் ஒன்றினை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்னெடுக்கும் நகர்வுகளை உறுதிப்படுத்த வேண்டும் என்பதாகும்.
தமிழ் மக்களும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகிய நாமும் அரசாங்கத்தின் உள்ளக பொறிமுறையை நம்பவில்லை. அதற்கு பல சாட்சியங்களை எம்மால் முன்வைக்க முடியும்.அண்மைய கால அரசாங்கத்தின் செயற்பாடுகள் கூட இந்த அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை இழப்பிற்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. எனவே இதனை கருத்தில் கொண்டு சர்வதேச நாடுகள் கடுமையான தீர்மானங்களை முன்னெடுத்து அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என்பதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கையாகும் எனவும் அவர் கூறினார்.