மட்டக்களப்பு மேய்ச்சல் தரை விவகாரம் தொடர்பில் உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ தலைமையில் இன்று நடைபெற்ற அவசர கூட்டத்தில் வட,கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
முதல் கட்டமாக உடனடியாக மேய்ச்சல் தரை காணிகளை சோளம் பயிர்ச் செய்கைக்கு வழங்குவதை தடுத்து நிறுத்தி குறித்த விடயம் சம்பந்தமாக ஆராய்வதற்கு குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.மேலும் மயிலத்தணமடு, மாதவணை மேய்ச்சல் தரை பிரச்சினை தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் பேசப்பட்டது.
இந்தப் பிரச்சினைகளை ஆராய்வதற்கான மேற்படி குழுவில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், இரா.சாணக்கியன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாலர் பூ.பிரசாந்தன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரின் செயலாளர் மங்களேஸ்வரி சங்கர் அடங்கலாக அதிகாரிகள், பண்ணையாளர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த குழுவினர் எதிர்வரும் 2ஆம் திகதி குறித்த பிரதேசத்துக்குக் கள விஜயத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.இந்த விஜயத்தின்போது மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட அரச அதிபர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், இரா.சாணக்கியன், எம்.ஏ.சுமந்திரன், த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், சுரேன் இராகவன் மற்றும் மகாவலி, நீர்ப்பாசன, விவசாய திணைக்கள அதிகாரிகள், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரின் செயலாளர் மங்களேஸ்வரி சங்கர், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் ஆகியோர் பங்கேற்றனர்.