July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிகரிக்க அனுமதி

பால் மா, கோதுமை மா, சீமெந்து ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்க வாழ்க்கைச் செலவு தொடர்பான குழு, இன்று அனுமதி வழங்கியுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தீர்மானத்தை எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் முன்வைத்து அதற்கு அங்கீகாரம் பெற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும், அமைச்சரவையின் அனுமதி கிடைக்க பெற்றால் மாத்திரமே இந்த நடைமுறை செயற்படுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அரிசி மற்றும் குழந்தைகளுக்கான பால்மா ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்காதிருக்க வாழ்க்கைச் செலவுகள் குழு தீர்மானித்துள்ளது.

விலை அதிகரிப்பு தொடர்பான தீர்மானத்திற்கு அமைய இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பால் மாவின் விலையை 200 ரூபாவாலும், ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலையை 10 ரூபாவாலும், சீமெந்து ஒரு மூடையின் விலையை 50 ரூபாவாலும் அதிகரிக்க வாழ்க்கைச் செலவு குழு பரிந்துரை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சமையல் எரிவாயுவின் விலையை 550 ரூபாவால் அதிகரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப் பெறுமாயின், ஒரு கிலோ கிராம் பால் மாவின் விற்பனை விலை 1,145 ரூபாவாக நிர்ணயிக்கப்படும்.

அத்துடன், 50 கிலோ கிராம் நிறைகொண்ட சீமெந்து மூடையின் விற்பனை விலை 1,050 ரூபாவாக நிர்ணயிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இது தொடர்பான இறுதி முடிவு எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தின் போதே எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.