துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்களை உடனடியாக விடுவிக்குமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, சுங்கத் திணைக்கள பணிப்பாளர் மற்றும் இறக்குமதி, ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர்கள் நாயகம் ஆகியோருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இன்று நடைபெற்ற வாழ்க்கைச் செலவு பற்றிய அமைச்சரவை உபகுழு கூட்டத்தின் போதே பிரதமர் இந்த பணிப்புரையை வழங்கியுள்ளார்.
‘ஸும்’ தொழில்நுட்பத்தின் ஊடாக இந்தக் கூட்டம் நடைபெற்றதுடன், அலரி மாளிகையில் இருந்து பிரதமர் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார்.
இந்தக் கூட்டத்தின் போது, கருத்து தெரிவித்துள்ள நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ, அவ்வாறு துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை துரிதமாக சதொச மற்றும் அத்தியவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர்களின் ஊடாக மக்களுக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை தட்டுப்பாடின்றி சந்தைக்கு வெளியிடுவதற்கான பொறுப்பை வர்த்தக அமைச்சும், விவசாயத்துறை அதிகாரிகளும் ஏற்க வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை உள்ளூர் சோளப் பயிர் அறுவடை செய்யப்படும்வரை தற்போது நடைமுறையிலுள்ள முறையில் சர்வதேச சந்தையிலிருந்து சோளம் உள்ளிட்ட கால்நடை தீவன மூலப்பொருட்களை பெற்றுக் கொள்வதற்கு இராஜாங்க அமைச்சர் டீ.பி ஹேரத் முன்வைத்த கோரிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.