November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எரிபொருள் கொள்வனவிற்கு கடன் பெற இரு நாடுகளுடன் இலங்கை பேச்சுவார்த்தை!

எரிபொருள் கொள்வனவிற்கு கடன் பெற்றுக்கொள்வது தொடர்பிலும் எரிபொருளை கடனாக பெற்றுக்கொள்ளது தொடர்பிலும் இந்தியா மற்றும்  ஐக்கிய அரபு இராச்சியத்துடன் இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.

இதன்படி இந்திய அரசாங்கத்திடமிருந்த 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெற்றுக்கொள்வது தொடர்பில் இலங்கை அரசு பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி செயலாளர் பி.பி.ஜயசுந்தர தெரிவித்துள்ளதாக ‘எகனமி நெக்ஸ்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது.

நிலுவையில் உள்ள எரிபொருள் கொள்வனவிற்கான தொகையை செலுத்துவதற்கும் புதிதாக எரிபொருள் கொள்வனவு செய்வதற்குமே இந்த கடன் தொகை பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் இரண்டு முக்கிய உள்நாட்டு வங்கிகளில் கிட்டத்தட்ட 3.3 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகங்களில் கூறப்பட்டுள்ளதை போன்று ஈரானிடமிருந்து கடன் கோரப்படவில்லை என்று தெரிவித்துள்ள அவர், ”கட்டுப்பாடுகளின் அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்ட நாடுகளுடன் நாங்கள் கடன்கள் தொடர்பான விடயங்களை கையாள்வோம்” என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, ஐக்கிய அரபு இராச்சியத்திடமிருந்து கடன் அடிப்படையில் எரிபொருள் கொள்வனவு செய்வது குறித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளார்.

கடன் வசதியில் கச்சா எண்ணெயை கொள்வனவு செய்வது தொடர்பில் எமிரேட் நேஷனல் எண்ணெய் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடிவடைந்துள்ளதாக அமைச்சர் சில தினங்களுக்கு முன்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

செப்டம்பர் 21-23 வரை டுபாயில் நடைபெற்ற சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டில் கம்மன்பில பங்கேற்றுள்ளார்.

2012 இல் அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகள் காரணமாக இலங்கை ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க முடியாது. இதனிடையே உலகளாவிய எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்ப எண்ணெய் இறக்குமதிக்கு அதிக செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இலங்கை உள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் முதல் ஏழு மாதங்களில் நாட்டின் எண்ணெய்க்கான கடன் தொகை 41.5 சதவீதமாக அதிகரித்து 2 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்வடைந்துள்ளது.