இலங்கையின் கண்டி மாவட்டத்தின் கலஹா குறுப், அப்பர் கலஹா தோட்டத்தில் வாழும் மக்கள் முறையான அடிப்படை வசதிகள் இன்றி பெரும் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.
இந்தத் தோட்டத்தில் நான்கு லயன் குடியிருப்புகள் உள்ளதுடன், அங்கு சுமார் 45 குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இவர்கள் தேயிலை தொழில் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்தே வாழ்க்கையை கொண்டு நடத்துகின்றனர். இதனைத் தவிர குறிப்பிட்டு கூறுமளவுக்கு உப தொழில்கள் எதுவும் அப்பகுதியில் இல்லை.
தற்போது தாம் பணிபுரியும் தேயிலை மலைகள் காடுகளாகியுள்ளதுடன், அங்கு மிருகங்களின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
லயன் குடியிருப்புகள் திருத்தப்படாது, அன்று இருந்த நிலையில்தான் உள்ளன. எங்களுக்கு முறையான குடிநீர் வசதிகளோ, சுகாதார வசதிகளே இல்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
இதனால் தமது தோட்டத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரை கேட்டுக்கொள்வதாகவும், அத்துடன் தமக்கு பாதுகாப்பான இடங்களில் தனிவீடுகளை அமைத்துக்கொடுக்க நடவடிக்கையெடுக்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.