பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன், சுகாதார விதிமுறைகளை பின்பற்றியே நினைவேந்தல் செய்ய முற்பட்டார் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், பொலிஸாருக்கும் அவருக்கும் இடையில் சமூக இடைவெளியை கஜேந்திரன் எம்.பி பின்பற்றியிருந்தார் எனவும், ஆனால் பொலிஸாரே தனிமைப்படுத்தல் விதிகளை மீறி செயற்பட்டனர் எனவும் கஜேந்திர குமார் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய தினம் நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த முயன்றபோது பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கைது செய்யப்பட்டமை தொடர்பில் இன்று அவரது கட்சி அலுவலகத்தில் நடத்தப்பட்ட ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
பொலிஸார் தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினரை நினைவு கூற முடியாது என கூறியே அவ்விடத்தில் கஜேந்திரனை கைது செய்தனர்.
எனினும் கஜேந்திரன் எம்.பி கைது செய்யப்பட்டு விடுவிக்கும் நேரத்தில் ‘நினைவுகூறுவது தவறு என நாங்கள் வழக்கு தாக்கல் செய்யவில்லை கொரோனா தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதாலே கைது செய்தோம்’ என பொலிஸார் கூறியுள்ளனர் என்று கஜேந்திர குமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் யாழ். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் சம்பவத்தோடு தொடர்புடைய ஏனைய பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டோம். 27 ஆம் திகதி பொலிஸாரின் நடவடிக்கைகளை பொறுத்து எமது நடவடிக்கைகள் தொடரும் என்றும் அவர் அந்த ஊடகச் சந்திப்பில் கூறியுள்ளார்.
அத்துடன் இது தொடர்பில் அடிப்படை மனித உரிமைகள் மீறல் சம்பந்தமாக வழக்கு தாக்கல் செய்வது தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கவுள்ளதுடன், சபாநாயகருக்கும் தெரியாமல் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டமை குறித்தும் மற்றும் கஜேந்திரன் எம்.பியின் சிறப்புரிமை தொடர்பிலும் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பவும் நடவடிக்கையெடுப்போம் என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.