File Photo
காதல் திருமணத்தில் விருப்பமில்லாத பெற்றோர் வீட்டின் கதவுகளை பூட்டி வைத்துள்ளதால், தம்மால் வீட்டுக்குள் நுழைய முடியாதுள்ளதாகத் தெரிவித்து 30 வயது இளைஞன் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இலங்கையின் அம்பாறை மாவட்டம் உகன பொலிஸ் நிலையத்திலேயே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வீட்டின் பிரதான கதவு பூட்டப்பட்டுள்ளமையினால் ஏணியின் மூலமே மனைவியை வீட்டுக்குள் அழைத்துச் செல்ல வேண்டியுள்ளதாக அந்த இளைஞன் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டில் வேலை செய்து கடந்த ஆகஸ்ட் மாதம் நாடு திரும்பிய குறித்த இளைஞன், பதுளையைச் சேர்ந்த ஒரு யுவதியை பேஸ்புக் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
எனினும், அவரது பெற்றோரின் கடும் எதிர்ப்பையும் மீறி இந்த திருமணம் நடைபெற்றுள்ளது.
புகாரின்படி, அந்த தம்பதியினர் வீட்டுக்குள்ளே நுழையாமல் இருக்க, அவரது பெற்றோர் மற்றும் மூன்று சகோதரிகள் வீட்டின் பிரதான கதவை பூட்டி வைத்துள்ளனர்.
இதனிடையே, புதுமண தம்பதியினர் மாடி வீட்டில் வசித்து வந்ததாகவும், ஆனால் வெளியில் இருந்து வீட்டிற்குள் நுழைவதற்கு படிக்கட்டு இல்லை என்றும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இதனால், தனக்கும், மனைவிக்கும் வீட்டிற்குள் நுழையவும் வெளியேறவும் பிரதான கதவை திறந்து வைக்குமாறு தனது பெற்றோரை கட்டாயப்படுத்துமாறு பொலிஸாரிடம் அந்த இளைஞன் கோரிக்கை விடுத்துள்ளார்.