இலங்கையில் இறக்குமதி கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள பொருட்களுடன் இந்தியாவிலிருந்து வந்த 30 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் சுற்றுலா வீசாவில் இந்தியா சென்று நாடு திரும்பியவர்கள் என்று சுங்க ஊடகப் பேச்சாளர் சுநந்த சில்வா தெரிவித்தார்.
கடந்த 22 ஆம் திகதி சென்னையில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த விமானத்தில் வந்த குறித்த நபர்களின் பயணப் பொதிகளை பரிசோதித்த போது, நாட்டில் இறக்குமதிக்கு தடை செய்யப்பட்டுள்ள மஞ்சள், ஏலக்காய் மற்றும் மருந்துப் பொருட்கள் மீட்கப்பட்டதாக சுங்கப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி அந்த பயணிகளிடமிருந்து 472 கிலோகிராம் மஞ்சள், 352 கிலோகிராம் ஏலக்காய் மீட்கப்பட்டதாகவும், இவற்றின் மொத்தப் பெறுமதி பெறுமதி 40 இலட்சம் இலங்கை ரூபாய்க்கும் அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் கொழும்பை சேர்ந்தவர்கள் என்று சுங்க ஊடகப் பேச்சாளர் சுநந்த சில்வா தெரிவித்துள்ளார்.