இலங்கை அரசாங்கம் ஐநாவில் கூறும் கதைகளும் நாட்டுக்குள் வெளியிடும் அறிக்கைகளும் ஒன்றுக்கொன்று முரணானவை என்று ஜேவிபி தெரிவித்துள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பிரசார செயலாளர் விஜித ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐநாவில் ஜனாதிபதி வழங்கிய உத்தரவாதத்தை யதார்த்தமானதாக மாற்ற நாட்டுக்குள் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டுக்குள் நீதி, நியாயம் கிடைக்காத போதே, இலங்கையர்கள் தமது பிரச்சினைகளை சர்வதேசத்திற்கு எடுத்துச் செல்வதாகவும் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இலங்கையர்களுக்கு பிரச்சினைகளுக்கு நீதி கிடைக்காமை காரணமாகவே சர்வதேச நாடுகள் இலங்கைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி நிலைநாட்டப்படாமை கத்தோலிக்க மக்களின் பிரச்சினை மாத்திரமன்றி, ஒட்டுமொத்த இலங்கை மக்களினதும் பிரச்சினையாகும் என்று ஜேவிபி சுட்டிக்காட்டியுள்ளது.
“ஐநா பொதுச்சபையில் ஜனாதிபதி கோட்டாபய ‘இலங்கையில் பயங்கரவாத வன்முறைகள் மீண்டும் இடம்பெற இடமளிக்க மாட்டோம்’ என்ற உத்தரவாதத்தை வழங்கியமை தொடர்பில் நாம் மகிழ்ச்சியடைகிறோம்.
ஆனால், சரியாக விசாரணைகளை மேற்கொண்டு பலியானவர்களுக்கு நீதியை நிலைநாட்டினால் மாத்திரமே மீண்டும் இத்தகைய சம்பவம் இடம்பெறுவதை தடுக்க முடியும்.
இனவாதத்தைத் தூண்டும் குழுக்களை வெளியில் போடுவதற்குப் பதிலாக, ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய விசாரணைகளை சரிவர மேற்கொள்ளுமாறு நாம் அழுத்தம் கொடுக்கிறோம்” என்று விஜித ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.