July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘உலக நலனுக்காக உணவுக் கட்டமைப்பை நிலையானதாக மாற்றுவோம்’: ஐநா உணவுத் திட்ட மாநாட்டில் ஜனாதிபதி

உலகளாவிய சுகாதாரத்தைக் கருத்திற்கொண்டு உணவுக் கட்டமைப்பை மிகச் சிறந்த நிலையான முன்னேற்றத்தை நோக்கிக் கொண்டுசெல்வது அத்தியாவசியம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

ஐநா உணவுத் திட்ட மாநாட்டில், இணையவழியூடாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

உலகின் உணவுக் கட்டமைப்பை நிலையானதாக மாற்றுவதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்துச் செயற்படுவது அவசியமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் தொற்றுப் பரவல் உலகளாவிய உணவுப் பாதுகாப்பில் காணப்படும் குறைபாடுகளை எடுத்துக்காட்டியுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

மனித சுகாதாரத்துக்கும் சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இரசாயனப் பசளை, களை கொல்லிகள் மற்றும் பூச்சிக் கொல்லிகளின் பயன்பாட்டைத் தடை செய்ய தனது அரசாங்கம் தீர்மானித்ததாக கோட்டாபய ராஜபக்‌ஷ குறிப்பிட்டுள்ளார்.

சேதனமுறை விவசாயத்தை ஊக்குவிக்கும் போது, கிராமிய வறுமையைக் குறைக்கும் வகையில் சந்தைகளை இலக்கு வைக்கும் உணவுச் சங்கிலியை மேம்படுத்தும் தேவை காணப்படுவதோடு, இலங்கையின் உணவுக் கட்டமைப்பை நிலையான வகையில் மேம்படுத்துவதற்கும் மிகச் சிறந்த உணவுப் பாதுகாப்பை ஏற்படுத்திக்கொள்ளவும் முடியுமென்று ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.