January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும்; தினேஷ் குணவர்த்தன தெரிவிப்பு

மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும் என்பதே தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாக பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவின் பொதுவான நிலைப்பாடு என அக்குழுவின் தலைவர், சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

இந்தத் தேர்தலை விரைவில் நடத்த முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளை வழங்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ‘எங்கள் மக்கள் சக்தி கட்சி’ பாராளுமன்ற விசேட குழுவில் தனது கருத்துக்களை முன்வைத்ததுடன், இந்தக் கட்சி சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் வணக்கத்துக்குரிய அத்துரலிய ரத்ன தேரர் குழு முன்னிலையில் ஆஜராகியிருந்தார். தற்பொழுது நடைமுறையில் உள்ள விருப்பு வாக்கு முறையை முழுமையாக நீக்குவது பொருத்தமானது எனச் சுட்டிக்காட்டிய அவர், தொகுதிக்குப் பொறுப்பான உறுப்பினர் இருப்பது அவசியமானது என்றும் தெரிவித்தார்.

சிறுபான்மைக் கட்சிகளின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும், கொள்கை ரீதியாக அரசியலை முன்னெடுக்கும் கலாசாரம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அத்துரலிய ரத்ன தேரர் இங்கு குறிப்பிட்டார். தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்துவதற்கான அளவுகோல்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றும், அரசியல் கட்சிகளுக்கு ஜனநாயகத்தின் கோட்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக பாராளுமன்றத்தின் அதிகாரம் வேறு தரப்பினருக்கு வழங்கப்பட்டிருப்பதாக இந்தக் குழு முன்னிலையில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் கருத்துத் தெரிவித்த முன்னாள் அமைச்சரும், கட்சியின் நிறைவேற்று அதிகாரியுமான அஜித்.பி. பெரேரா குறிப்பிட்டார். நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கம் மற்றும் நீதிமன்றம் ஆகிய துறைகளுக்கிடையிலான சமநிலைத் தன்மை பேணப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தை கோவை தயாரிக்கப்பட்டிருப்பதுடன், இது பிரயோக ரீதியில் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும் அஜித் .பி .பெரேரா தெரிவித்தார். இதேபோல, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களுக்கான நடத்தை கோவையொன்று தயாரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.