January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கஜேந்திரன் எம்.பி பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார்

யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டோர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த முற்பட்டபோது கைது செய்யப்பட்ட இவர்கள், பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு வாக்கு மூலங்கள் பெறப்பட்ட பின்னர், இன்று மாலை பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை இவர்களுக்கு எதிராக எதிர்வரும் 27ஆம் திகதி நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வு நடத்தும் நபர்களை கைது செய்யும் நோக்குடன் இன்று வியாழக்கிழமை முதல் பொலிஸார் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் இன்றைய தினம் அஞ்சலி செலுத்த சென்ற போது, அதற்கு பொலிஸார் தடை விதித்தனர்.

நீதிமன்ற தடையுத்தரவு இன்றி என்னை தடுக்க முடியாது என கூறி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், தடைகளை மீறி அஞ்சலி செலுத்த முற்பட்ட வேளை அவரையும் அவருடன் சென்றவர்களையும் பொலிஸார் கைது செய்திருந்தனர்.