இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி. எஸ்.ஜெய்சங்கர் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
ஐநா பொதுச் சபைக் கூட்டத்தின் பக்க அம்சமாக, நியூயோர்க் நகரில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பின் போது, கொவிட் 19 தொற்றுநோய் மற்றும் இதனை கட்டுப்படுத்துவது தொடர்பில் இலங்கை அரசாங்கம் செயற்படுத்தும் வெற்றிகரமான நடவடிக்கைகள் தொடர்பாக பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், இந்திய வெளியுறவு அமைச்சருக்கு விளக்கியுள்ளார்.
இதேவேளை பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மறுபரிசீலனை செய்தல், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம், காணாமல்போனோர் அலுவலகம், இழப்பீட்டு அலுவலகம், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் ஜீ.எல்.பீரிஸ், இந்திய வெளியுறவு அமைச்சருக்கு தெளிவுப்படுத்தியுள்ளார்.
அத்துடன், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளில் காணப்படும் முன்னேற்றங்கள் குறித்தும் வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், நாடுகளுக்கு எதிரான தீர்மானங்கள் அந்த நாடுகளின் அனுமதியின்றி செயற்படுத்தப்பட முடியாது என்ற அடிப்படையில் இலங்கை எடுத்த கொள்கை நிலைப்பாட்டில் உறுதியாக நிற்பதாகவும், வலுவான உள்நாட்டுப் பொறிமுறைகளினூடாக முன்னோக்கிச் செல்லும் போது வேறு எந்த வெளிப்புறப் பொறிமுறைகளையும் இலங்கையால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் வெளிநாட்டு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, இரு நாடுகளினதும் நலன் கருதி, எஞ்சியிருக்கும் பிரச்சினைகளுக்கு நியாயமான மற்றும் நீதியான தீர்வுகள் அவசியம் என அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, மக்களுக்கிடையிலான தொடர்புகளை அதிகரித்தல் உட்பட பல்வேறு வழிகளில் இலங்கையுடன் இணைந்து பணியாற்றுவதற்கு இந்தியா தயாராக இருப்பதாக அமைச்சர் ஜெய்சங்கர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த நேரத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் உட்பட அனைத்து பங்குதாரர்களுடன் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் ஜெய்சங்கர் எடுத்துரைத்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை பலப்படுத்தும் வகையில், நிலுவையில் உள்ள ஒப்பந்தங்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு இரு அமைச்சர்களும் இணங்கியதாக, இலங்கை வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.