மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்பட்ட காலப்பகுதியில் மக்கள் சட்டவிரோத மது உற்பத்திக்கு திரும்பியதன் காரணத்தால் தான் மதுபான விற்பனை நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை எடுத்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
கொரோனா வைரஸ் காரணமாக நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதால் கடந்த காலங்களில் மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்பட்டன. இதனால் கிராமப் புறங்களில் விஷ மதுபான உற்பத்தி அதிகரித்துள்ளன. எனவே, அபாயத்திலிருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில் மதுபான விற்பனை நிலையங்களை திறப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.
அத்துடன், மதுபான விற்பனை நிலையங்களை திறப்பதற்கு யார் தீர்மானித்தார்கள் என்பதை கண்டுபிடிக்க முயற்சிப்பதை விட மதுபான விற்பனை நிலையங்கள் எந்த நோக்கத்திற்காக திறக்கப்பட்டது என்பதை புரிந்து கொள்வதில் தான் தங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.