யாழ்ப்பாணம், நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தை சுற்றி பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வுகள் நடத்தப்படுவதை தடுக்கும் வகையிலேயே பொலிஸார் அந்தப் பகுதியில் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள, தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு அமைய, நீதிமன்ற தடை உத்தரவின்றி இந்த நடவடிக்கையை முன்னெடுக்குமாறு பொலிஸாருக்கு உயர் மட்டத்திலிருந்து பணிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அதற்கு அமைய யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட மூவர் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்திய – இலங்கை அரசுகளிடம் நீதி கோரி, 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த திலீபனின் 34 ஆம் வருட நினைவு வாரம், கடந்த 15 ஆம் திகதி ஆரம்பமாகிய நிலையில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் அவ்விடத்தில் அஞ்சலி நிகழ்வுகளை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.