மன்னார், கோயில் மோட்டை பகுதி விவசாயிகளின் பிரச்சனைகள் தொடர்பில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், நேரில் சென்று ஆராய்ந்துள்ளார்.
மடு பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட கோயில் மோட்டை பகுதி மக்கள் நீண்ட காலமாக விவசாயம் செய்துவரும் அரச காணியை தங்களுக்கு வழங்க வேண்டும் என, மடு தேவாலய பரிபாலனசபையினர் கோரி வந்ததுடன், அந்தக் காணியை பெற்றுக்கொள்ள பல்வேறு நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
இவ்வாறான நிலைமையில் அந்தக் காணியில் விவசாயம் செய்வதற்கு அனுமதிக்குமாறு கோரி, கோவில் மோட்டை விவசாயிகள் உண்ணாவிரதம் உள்ளிட்ட, பல போராட்டங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்தனர்.
இந் நிலையில் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் நேற்று நடைபெற்ற ‘கொரோனா இல்லாத இலங்கை உருவாக வேண்டும்’ என இடம்பெற்ற விசேட பூஜையில் கலந்துகொள்வதற்காக கலகொட அத்தே ஞானசார தேரர் அங்கு சென்றிருந்தார்.
இதன்போது, கோயில் மோட்டை விவசாயிகள் தங்களின் காணி பிரச்சினையை தீர்த்து தருமாறு கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில், ஞானசார தேரர் உள்ளிட்ட குழுவினர் அந்தப் பகுதிக்கு சென்றனர்.
இவ்வேளையில், தேவாலயங்களுக்கு காணிகளை வழங்குவதை விட மக்களின் பசியை தீர்ப்பதே முக்கியம் என குறிப்பிட்டுள்ள ஞானசார தேரர், குறித்த காணியை கோயில் மோட்டை விவசாயிகளுக்கு பெற்றுத்தர தான் இயன்ற நடவடிக்கைகளை எடுப்பதாக கூறியுள்ளார்.