January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘வளமான எதிர்காலத்தை உருவாக்க சர்வதேச பங்குதாரர்கள் மற்றும் ஐ.நா.வின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள தயார்’

“இனப் பாகுபாடு, மதம் மற்றும் பாலின வேறுபாடுகளின்றி, அனைத்து இலங்கையர்களுக்கும் வளமானதும் நிலையானதும் பாதுகாப்பானதுமான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக, சர்வதேச பங்குதாரர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள நாங்கள் தயார்” என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

ஐ.நா. சபையின் 76வது பொதுச் சபைக் கூட்டத் தொடரில் இன்று உரையாற்றும் போதே  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

கொவிட் – 19 தொற்றுப் பரவலின் மூலம் கற்றுக் கொண்ட பாடங்களைப் பறிமாறிக் கொள்ளவும் சிறந்த முறையில் நாடுகளை மீளக் கட்டியெழுப்பவும், பிராந்திய தகவல் மையமொன்றை அமைப்பதற்கான ஒத்துழைப்பு, உலக சுகாதார ஸ்தாபனத்துக்கு வழங்க, இலங்கை எதிர்பார்க்கின்றது.

அபிவிருத்தி அடைந்துவரும் நாடாக இருப்பினும், தடுப்பூசி ஏற்றல் வேலைத்திட்டத்தில், இலங்கை வெற்றி கண்டுள்ளது. 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், முழுமையானளவில் தடுப்பூசி ஏற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.ஒக்டோபர் மாத இறுதிக்குள், 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், முழுமையானளவில் தடுப்பூசி ஏற்றப்படும். மிக விரைவில், 15 வயதுக்கு மேற்படி சிறுவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் வேலைத் திட்டத்தையும் ஆரம்பிக்கவுள்ளோம்.

சுகாதார சேவை ஊழியர்கள், பாதுகாப்பு படையினர் மற்றும் பொலிஸார், அரச ஊழியர்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கிடையிலான ஒருங்கிணைப்பே, இந்தத் தடுப்பூசி ஏற்றல் வேலைத்திட்டத்துக்கு அடித்தளமாக அமைந்திருக்கிறது” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

” தொற்றுப் பரவல் காரணமாக, இலங்கை கடுமையான சிரமத்துக்கு உள்ளாகியுள்ளது. சோகமயமான உயிரிழப்புகளுக்கு மேலதிகமாக, எங்களுடைய பொருளாதாரத்துக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
நாட்டை பூட்டுவது மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடு விதித்தல், சர்வதேச உல்லாசப் பயணிகளின் வருகை வீழ்ச்சி மற்றும் மிதமான உலக வளர்ச்சி என்பன, எமது பொருளாதாரத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

காலநிலை மாற்றங்களுக்கு இலக்காகும் ஒரு நாடாக, அதில் உள்ள அபாயங்கள் குறித்து இலங்கை நன்கு அறிந்திருக்கிறது.இலங்கையின் தத்துவப் பாரம்பரியம் ஆழமாக வேரூன்றியுள்ள என்றும் சுற்றுச்சூழல் மதிப்பைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும், கௌதம புத்தர் வலியுறுத்தியிருக்கிறார்” என்று தெரிவித்தார் ஜனாதிபதி.

எம்முடைய மின்சக்தி கொள்கையின் ஊடாக, 2030 ஆம் ஆண்டுக்குள், எமது தேசிய மின்சாரத் தேவையின் 70 வீதத்தை, சூரியசக்தி, காற்றாலை மற்றும் நீர் போன்ற புதுப்பிக்கத்தக்க சக்தி வலுக்களினூடாக பெற்றுக் கொள்ள எதிர்பார்க்கிறோம்.

எமது பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புதல் மற்றும் தேசிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களைச் செயற்படுத்தும் போதும், சர்வதேச சமூகத்தினரின் ஒத்துழைப்பை இலங்கை அன்புடன் வரவேற்கிறது.

முதலீடுகளைப் பெற்றுக் கொள்வதற்கும் வர்த்தகத் தொடர்புகளை விரிவுபடுத்திக் கொள்வதற்கும், எமது நாட்டின் அமைவிடம் மற்றும் எங்களுடைய வலுவான நிறுவனங்கள், வலுவான சமூக உட்கட்டமைப்பு மற்றும் திறமையான பணியாளர்களை அதிகளவில் பயன்படுத்த எதிர்பார்த்திருக்கிறோம்.

இதற்கான வசதிகளை வழங்குவதோடு, எமது மக்கள் அனைவரையும் வளப்படுத்துவதற்கான நீதி, ஒழுங்கு, நிர்வாகம் மற்றும் கல்வி போன்ற துறைகளையும் விரிவுபடுத்தி, விரிவான சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள, எனது அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

சுதந்திரம் கிடைப்பதற்கு முன்னர் இருந்தே, இலங்கையானது சர்வஜன வாக்குரிமையை பெற்றிருந்தது. ஜனநாயக கலாசாரம் என்பது, எமது வாழ்வியலில் மிக முக்கிய அங்கமாக காணப்படுகிறது.

வளமானதும் நிலையானதுமான நாடொன்று உருவாக்கப்படுவதற்காகவும் தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை உறுதிப்படுத்துவதற்காகவும், 2019 ஆம் ஆண்டில் என்னை இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கவும் 2020 இல் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலின் ஊடாகப் புதிய அரசாங்கமொன்றை உருவாக்கவும், மாபெரும் மக்கள் ஆணையை இலங்கை மக்கள் வழங்கியுள்ளனர்.

2019 ஆம் ஆண்டில், அடிப்படைவாத மதவாதத் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களையும் இலங்கை எதிர்கொண்டது. அதற்கு முன்னர், அதாவது 2009 ஆம் ஆண்டு வரையில், சுமார் 30 வருடங்களாக இலங்கையில் யுத்தம் நிலவியது. பயங்கரவாதம் என்பது, உலகளாவிய அச்சுறுத்தல் என்பதோடு, அதனை வெற்றி கொள்ள வேண்டுமாயின், விசேடமாக புலனாய்வுத் தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கு, சர்வதேசத்தின் ஒத்துழைப்பு அத்தியாவசியமாகின்றது.

கடந்த அரை நூற்றாண்டு காலத்தில், இலங்கையில் ஆயிரக்கணக்கான உயிர்களும் பல தசாப்தங்களுக்குரிய செழிப்பும் இழக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்த ஜனாதிபதி,

” இதுபோன்ற வன்முறைச் செயல்கள் இலங்கையில் மீண்டும் நடக்காது என்பதை உறுதி செய்வதில் எனது அரசு உறுதியாக உள்ளது.அதனால், அவற்றின் பின்னால் காணப்படும் அடிப்படைப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம்.

நீடித்த சமாதானத்தை நாட்டுக்குள் ஏற்படுத்திக் கொள்ள,தேசிய நிறுவனங்களினூடான பொறுப்புக்கூறல், மறுசீரமைக்கப்பட்ட நீதி மற்றும் அர்த்தமுள்ள நல்லிணக்கம் ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
பொருளாதார அபிவிருத்தியின் பிரதிபலன்களுக்காக, நியாயமான பங்கேற்பை உறுதி செய்வதிலும் உண்மையாக இருக்க வேண்டும்.

இனப் பாகுபாடு, மதம் மற்றும் பாலின வேறுபாடுகளின்றி, அனைத்து இலங்கையர்களுக்கும் வளமானதும் நிலையானதும் பாதுகாப்பானதுமான எதிர்காலத்தை உருவாக்குவதே, என்னுடைய அரசாங்கத்தின் நோக்கமாகும்.

இந்தச் செயற்பாட்டுக்காக, அனைத்து உள்ளூர் பங்குதாரர்களுடன் இணைந்து, சர்வதேசப் பங்குதாரர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள நாங்கள் தயார் என்று தெரிவித்த ஜனாதிபதி, எவ்வாறெனினும், மக்களின் அபிலாஷைகளை பிரதிபலிக்கும் உள்ளூர் நிறுவனங்கள் மூலம் மட்டுமே நிலையான முடிவுகளைப் பெறமுடியுமென்பதை வரலாறு எடுத்துக் காட்டியுள்ளது.

இலங்கையின் பாராளுமன்றம், நீதித்துறை மற்றும் சுயாதீன சட்டரீதியான அமைப்புகள், தங்கள் செயற்பாடுகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்ற வரம்பற்ற இடத்தை கொண்டிருக்க வேண்டும்.

ஆப்கானிஸ்தானில் பௌத்த உரிமைகளைப் பாதுகாத்து ஊக்குவிக்குமாறு, ஐக்கிய நாடுகள் சபையிடமும் சர்வதேசத்திடமும் கேட்டுக் கொள்கிறேன்.

அனைத்து மனித குலத்துக்கும் சிறந்ததும் நிலையானதுமான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக, உண்மையான ஒத்துழைப்புடனும் தியாக மனப்பான்மையுடனும், நல்லெண்ணம் மற்றும் பரஸ்பர மரியாதையுடன் ஒன்றாகப் பணியாற்றுவோம் என்று, இந்த மாபெரும் சபையில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளிடம் நான் கேட்டுக்கொள்கிறேன் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.