November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜப்பானில் அகதிகள் அந்தஸ்து மறுக்கப்பட்டமைக்கு எதிரான வழக்கில் இலங்கையர் இருவருக்கும் இழப்பீடு!

ஜப்பான் குடிவரவு அதிகாரிகளினால் 2 இலங்கையர்கள் நாடு கடத்தப்படுவதற்கு எதிரான வழக்கில் 600,000 யென்களை இழப்பீடாக வழங்கும்படி, டோக்கியோ உயர் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

ஜப்பான் குடிவரவு அதிகாரிகள் இரண்டு இலங்கை அகதிகள் தொடர்பில் சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்காது அவர்களுக்கு அகதிகள் அந்தஸ்து வழங்க மறுத்ததையடுத்து அவர்கள் நாடு கடத்தப்பட்டனர்.

எனினும், இவ்வாறு தாம் நாடு கடத்தப்படுவது அரசியலமைப்புக்கு முரணானது என தெரிவித்து ஜப்பானிய அரசுக்கு எதிராக குறித்த இருவரும் மொத்தம் 10 மில்லியன் யென்கள் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளதாக ஜப்பான் “டைம்ஸ்” செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த இரு இலங்கையரும் டிசம்பர் 2014 இல் டோக்கியோ பிராந்திய குடிவரவு சேவைகள் பணியகத்தில் அகதிகள் அந்தஸ்துக்காக விண்ணப்பித்த போது, அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு மறுநாளே ஹனேடா விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்.

சட்ட உதவியை அணுக அனுமதிக்காமல் அவர்களை நாடு கடத்துவதன் மூலம் நீதித்துறை மறு ஆய்வு செய்வதற்கான வாய்ப்பை அவரகள் இழந்துவிட்டதாக நீதிபதி தெரிவித்தார்.

ஜப்பானின் அரசியலமைப்பின் படி, குடிவரவு பணியகத்தின் அதிகாரிகள்  “அகதிகளின் விசாரணைக்கான உரிமையை மீறியுள்ளனர்” என குறித்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி யூதக ஹிரதா கூறினார்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட குறித்த இரண்டு இலங்கையர்களுக்கும் ஜப்பான் அரசு மொத்தம் 600,000 யென்களை (1,091,439 இலங்கை ரூபாய்) இழப்பீடாக வழங்க வேண்டும் என டோக்கியோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு வழக்கறிஞரின் கூற்றுப்படி, ஜப்பானில் இப்படியான ஒரு தீர்ப்பு வழங்கப்படுவது இதுவே முதல் முறை.

அகதி அந்தஸ்து வழங்குவதில் மிகக் குறைந்த வீதத்தை கொண்ட நாடாக ஜப்பான் உள்ளது.

கடந்த ஆண்டு குடியுரிமை  கோரிய 4,000 விண்ணப்பங்களில் 47 விண்ணப்பங்களும் 2019 இல் 10,400 விண்ணப்பங்களில் 44 விண்ணப்பங்களும் மட்டுமே ஜப்பான் குடிவரவு அதிகாரிகளினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.