
இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் பொதுச் செயலாளர் யூசுப் அல்- ஒதைமீன் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
நியூயோர்க்கில் நடைபெற்று வரும் ஐநா பொதுச் சபையின் 76 ஆவது அமர்வின் போதே, இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இலங்கைக்கும் முஸ்லிம் உலகத்திற்கும் இடையிலான நீண்டகாலத் தொடர்பு மற்றும் நெருக்கமான உறவுகளை அமைச்சர் பீரிஸ் நினைவுபடுத்தியுள்ளார்.
பலஸ்தீன அரசை முதலில் அங்கீகரித்தவர்களில் இலங்கையும் ஒன்றாவதுடன், முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மகிந்த ராஜபக்ஷ இலங்கை பலஸ்தீன நட்புறவுச் சங்கத்தை நிறுவி, கடந்த 25 ஆண்டுகளாக அதன் தலைவராகப் பணியாற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்கும் அதன் உறுப்பு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான மற்றும் நீண்டகால உறவுகளை பொதுச் செயலாளர் அல்-ஒதைமீனும் பாராட்டியுள்ளார்.
இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு தீவிரவாதம், வன்முறை மற்றும் வெறுப்புக்கு எதிராக நிற்பதனை அவர் வலியுறுத்தியுள்ளதுடன், சமூக ஊடகங்கள் மற்றும் ஏனைய கருவிகளால் தவறான தகவல்கள் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் முன்னேற்றங்களைக் காண தூதுக்குழுவொன்றிற்கு தலைமை தாங்கி இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் செயலாளர் நாயகத்திற்கு வெளியுறவு அமைச்சர் பீரிஸ் அழைப்பு விடுத்துள்ளார்.