இலங்கை அரசாங்கத்துடன் புலம்பெயர் மக்கள் அரசியல் தீர்வு உட்பட எந்தவொரு தலைப்பிலும் கலந்துரையாடுவது சாத்தியமில்லை என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பு தெரிவித்துள்ளது.
புலம்பெயர் தமிழ் அமைப்புகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலந்துரையாடலுக்கு அழைத்திருந்த நிலையில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு அரசியல் தீர்மானத்துக்கும் பொறுப்புக்கூறல் என்பது முன் நிபந்தனையாகும் என்றும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய இலங்கைத் தீவில் அமைதியைக் கொண்டுவருவதில் உண்மையான அக்கறை கொண்டிருந்தால், 2015 ஆம் ஆண்டு ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் அல் ஹ_ஸைனின் ‘சர்வதேச குற்றவியல் குற்றங்கள், இனப்படுகொலை, மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் போன்றவற்றை விசாரிப்பதற்கான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகார வரம்பை வழங்க வேண்டும்’ என்ற பரிந்துரையை செயற்படுத்த வேண்டும் என்று குறித்த அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைத் தீர்மானிக்கும் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றையும் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புலம்பெயர் தமிழ் மக்களை பேச்சுவார்த்தைக்கு அழைப்பது யூத இனப்படுகொலையின் பின்னர் ஆட்சியில் இருக்கும் ஹிட்லர், யூத புலம்பெயர்ந்தோரை பேச்சுவார்த்தைக்கு அழைப்பதைப் போன்றாகும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.