January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட் தொற்றிய மனைவியை சொத்துக்காக கொலை செய்த குற்றச்சாட்டில் கணவர் கைது!

கொவிட் தொற்றுக்குள்ளான மனைவியியை, அவரின் சொத்தை அபகரிக்கும் நோக்கில்  கொலைசெய்து அதனை மறைக்க முயன்ற குற்றச்சாட்டில் தொழிலதிபர் ஒருவர், பொரலஸ்கமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக தனது மனைவியை கொன்று அவரின் சொத்தை அபகரிக்க திட்டம் தீட்டியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது.

பொரலஸ்கமுவவில் வசிக்கும் 45 வயதுடைய தாய் ஒருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

கொவிட் தொற்றுக்குள்ளாகி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த குறித்த பெண்ணை, அவரின் கணவர் படுக்கையில் வைத்து மூச்சுத்திணரலுக்கு உட்படுத்தி கொன்றுள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

செப்டம்பர் 15 ஆம் திகதி  இரவு 10 மணியளவில் குறித்த பெண் தூக்கத்தில் இறந்துவிட்டதாக அவரின் கணவர் பெண்ணின் சகோதரருக்கு  தெரிவித்துள்ளார்.

எனினும், குறித்த நபரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதோடு அவரது கழுத்தில் இருந்த காயத்தை மறைக்க பலமுறை முயன்றதை அடுத்து, உயிரிழந்த பெண்ணின் சகோதரர் மரணம் குறித்து விசாரிக்குமாறு பொலிஸ் நிலையத்தில் முறைபாடு பதிவுசெய்துள்ளார்.

இதையடுத்து கல்கிசை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் கொழும்பு தெற்கு மருத்துவமனையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், மூக்கு மற்றும் வாயை இறுக்கமாக மூடியதால் மூச்சுத்திணறல் காரணமாக குறித்த பெண் இறந்ததுள்ளமை தெரியவந்ததுள்ளது.

அத்தோடு மஹரகம பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் பாகுதி அளவில் எரிந்த தலையணை மற்றும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட படுக்கை விரிப்புகளை கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொரலஸ்கமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.