October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”அரசாங்கத்தை ஆதரிப்பதை தவிர வேறு வழியில்லை” – அரவிந்தகுமார்

”எனது மக்களின் நலனையும் அவர்களின் வாழ்வாதார மேம்பாடுகளையும் முன்னிலைப்படுத்தியே அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்ட மூலத்தை ஆதரித்தேன்” என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மீதான வாக்கெடுப்பின் போது அதற்கு ஆதரவாக அரவிந்தகுமார் வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, அவரை தமிழ் முற்போக்கு கூட்டணியில் இருந்து நீக்குவதற்கு கூட்டணியின் தலைமையினால் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இது தொடர்பாக இன்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அரவிந்தகுமார், ”தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கு எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து கொண்டு எமது மக்கள் நலன் குறித்த எந்தவொரு வேலைத்திட்டத்தையும் மேற்கொள்ளாமல், வெறுமனே கொள்கைகளை மட்டும் பேசிக்கொண்டு இருப்பது பலனில்லை என்று தான் எண்ணுவதாகவும், இதனால் மக்களின் நலனையும் வாழ்வாதார மேம்பாடுகளையும் முன்னிலைப்படுத்தியே 20வது திருத்தச் சட்ட மூலத்திற்கு ஆதரவளித்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ”எமது மக்கள் என்னை தெரிவு செய்தமை பெரும் எதிர்பார்ப்பின் மத்தியிலேயாகும். அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற இருக்கும் ஒரே வழி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதேயாகும். எனது தீர்மானத்தை எமது மக்களும் ஏற்றுக்கொண்டார்கள் என்பதை அவர்களிடமிருந்து எனக்கு கிடைத்து வரும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் நன்றிகளுமே சான்று பகிர்கின்றன” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.