“அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா சிறைச்சாலைக்கு எந்தவித காலதாமதமும் இன்றி மாற்றப்படுவதற்கான நடவடிக்கைகளை நீதி அமைச்சர் உடனடியாக எடுப்பாரா? ” என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபையில் கேள்வியெழுப்பினார்.
அனுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்தியதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் பாராளுமன்றில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்ற நிலையியல் கட்டளை 27/2 இன் கீழ் விசேட பிரேரணை ஒன்றினை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“12.09.2021 ஆம் திகதியன்று பதவியிலிருந்த சிறைச்சாலை மற்றும் கைதிகள் புனர்வாழ்வு தொடர்பான இராஜாங்க அமைச்சர், 12-09-2021 அன்று மாலை 6 மணியளவில் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று, தனது பதவி நிலை அதிகாரத்தை பயன்படுத்தி, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளை, தனக்கு முன் கொண்டுவந்து நிறுத்துமாறு பணித்திருந்தார்.
அவரது பணிப்பிற்கிணங்க, அங்கு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த 10 தமிழ் அரசியல் கைதிகளை (ஒன்பது பேர் சந்தேக நபர்பகள்) சிறை அலுவலர்கள் அவர் முன்னிலையில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள்.
அதன் போது, அவர்களை சிறுமைப்படுத்தும் விதமாக அந்த தமிழ் கைதிகளை தனக்கு முன் முழந்தாளிட்டு நிற்குமாறு குறித்த அமைச்சர் பணித்ததுடன், அவரது பாதுகாப்புக்கென வழங்கப்பட்டதாக கருதப்படுகின்ற கைத்துப்பாக்கியை எடுத்து, தனக்கு இந்த அமைச்சு பதவியை வழங்கி வைத்தபோது ,’இந்த சிறைக் கைதிகளை விடுவிப்பதற்கும் அல்லது சுடுவதற்கும் உரிய அதிகாரத்தை பெற்றுக் கொண்டதா’ எக்காளமிட்டு கூறி, பயங்கரவாதத் தடைச்சட்டம் மூலம்
தடுத்து வைக்கப்பட்டிருந்த அந்த தமிழ் கைதிகளினை அச்சுறுத்தி இருந்தார்.
இப்படி நடந்து கொண்டிருக்கும் போது, கட்டுப்படுத்த முடியாதளவிற்கு ஆவேசமாக நடந்த குறித்த நபர், தனது
கைத் துப்பாக்கியை இரு தமிழ் கைதிகளின் உடலிலும் தலையிலும் மீண்டும் மீண்டும் அழுத்தி அவர்களை அந்த இடத்திலேயே சுட்டுக் கொலை செய்யப் போவதாக அச்சுறுத்தி இருந்தார் .
இந்த சந்தர்ப்பத்தில், அதுவரை பார்வையாளர்களாக நின்று கொண்டிருந்த சிறைச்சாலைக்கு பொறுப்பான அதிகாரிகளும் குறித்த நபரின் தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்களும், நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து, தன்னிலை மீறி ஆத்திரத்துடன் நின்று கொண்டிருந்த குறித்த அமைச்சரை சமாதானப்படுத்தி, அவ்விடத்தில் இருந்து அகற்ற முயற்சி செய்துள்ளனர்.
மிகுந்த எத்தனத்தின் பின்னர் அவர் சிறைச்சாலை வளாகத்தில் இருந்து வெளியே அழைத்து செல்லப்பட்டார். இதன்போது, அந்த சிறைக் கைதிகளுக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய மன அழுத்தம்,அச்சுறுத்தல் குறித்து நீங்கள் விளங்கி கொள்ள முடியும். அங்கு இருந்து சம்பவத்தில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில், நான் இந்த சம்பவத்தை எனது உத்தியோகபூர்வ ட்விட்டர்
பக்கம் மூலம் 14-09-2021 அன்று வெளி உலகிற்கு வெளிப்படுத்தி இருந்தேன். அதைத் தொடர்ந்து 15-09-2021 அன்று பத்திரிகையாளர் மாநாடு மூலமாகவும் இந்த கொடூரமான சம்பவம் குறித்தான மேலதிக விடயங்களை பகிரங்கப்படுத்தியிருந்தேன்.
அதனைத் தொடர்ந்து 16-09-2021 அன்று நானும் எனது சக பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் அவர்களும் சம்பவம் நடைபெற்ற அநுராதபுர சிறைச்சாலைக்கு நேரடியாக விஜயம் செய்து, இந்த சம்பவம் குறித்து மேலதிக தகவல்களை அறிந்து உறுதிப்படுத்திக் கொண்டோம்.
இச் சம்பவம் குறித்து வெளியுலகிற்கு தெரியப்படுத்த நாம் நடாத்திய பத்திரிகையாளர் மாநாடு முடிவடைந்த சிலமணி நேரங்களில்,’அநுராதபுர சிறைச்சாலையில் நடந்த சம்பவத்திற்கான பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு, தனது சிறைச்சாலை மற்றும் கைதிகள் புனர்வாழ்வு குறித்தான இராஜாங்க அமைச்சுப் பதவியில் இருந்து லொகான் ரத்வத்த ராஜினாமா செய்திருப்பதாகவும் அதை ஜனாதிபதி ஏற்றிருப்பதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டிருந்தது.
சிறைக்கைதிகளின் உரிமைகளை உறுதிப்படுத்துகின்ற சர்வதேச சட்டங்களான மனித உரிமைகளிற்கான சர்வதேச பிரகடனம், குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளிற்கான சர்வதேச சாசனம் (ICCPR ), சித்திரவதை மற்றும் ஏனைய துன்புறுத்தல்கள், மனிதத்துவம் அற்ற, கீழ் நிலைப்படுத்தும் நடவடிக்கை மற்றும் சித்திரவதைகளிற்கு எதிரான சாசனம் போன்றவற்றில் சிறிலங்காவும் கைச்சாத்திட்டிருக்கின்றது. நெல்சன் மண்டேலா சட்டம் என பொதுவாக அறியப்படுகின்ற ஐக்கிய நாடுகள் சபையின் சிறைக் கைதிகளை பரிபாலனை தொடர்பிலான ஆகக் குறைந்த நியமங்கள் (SMR) குறித்த சட்டம் மற்றும் அதனோடு இணைந்த பிற சர்வதேச சட்ட நியமங்கள் என்பனவும் அடங்கும்.
இராஜாங்க அமைச்சராகவிருந்த குறித்த நபரின் இந்த நடவடிக்கையானது, சட்டவிரோதமானது என்பதை மட்டுமல்ல, இதுபோன்ற குற்றத்தை இழைத்த குற்றவாளிக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்துகின்றது .
அத்தோடு, சிறைக்கைதிகள், தமது வீடுகளுக்கு அண்மையாக உள்ள சிறைச்சாலைகளில் வைத்துப் பராமரிப்பதையும் மேற்கூறிய சட்டங்கள் வலியுறுத்துகின்றன. இந்த பின்புலத்தில், பிரதம மந்திரி மற்றும் நீதி அமைச்சர் ஆகியோரிடம் கீழ்வரும் கேள்விகளை கேட்க விரும்புகின்றேன்.
1. குறித்த நபர் இழைத்த குற்றவியல் நடத்தையின் பரிமாணத்தின் அடிப்படையில் அவர் சிறைச்சாலை மற்றும் சிறைக்கைதிகள் விவகார அமைச்சராக இருப்பதற்கு மட்டுமல்ல, எந்தவொரு அமைச்சுப் பதவியில் அல்லது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலோ இருக்க முடியாதவர் ஆகின்றார். அதன் அடிப்படையில், அவர் எந்தவொரு அமைச்சுப் பதவியிலும் இல்லாது இருப்பதையும் அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கப்படுவதையும் உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் மேற்கொள்ளுமா?
2. குறித்த நபரின் இந்த செயற்பாடு குறித்தும் மீறப்பட்ட சட்டங்களின் அடிப்படையிலும், அவரை கைது செய்யவும் பொருத்தமான சட்ட நடவடிக்கைகளை எடுக்கவும் சட்டமா அதிபரிற்கு எந்தவொரு புற அழுத்தமும் வழங்கப்படாது இருப்பதை இந்த அரசாங்கம் உறுதிப்படுத்துமா?
3. குறித்த நபரின் சட்டவிரோத நடவடிக்கைகளை அநுராதபுர சிறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தத் தவறியமையால் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் பெயரால் அனுராதபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் உயிரிற்கும் பாதுகாப்பிற்கும் ஏற்பட்டிருக்கும் பாரிய அச்சுறுத்தல்களை கருத்தில் கொண்டும் , சிறைக்கைதிகள் தொடர்பிலான சர்வதேச சட்டமான நெல்சன் மண்டேலா சட்டம் (SMR) வலியுறுத்துவதன் அடிப்படையிலும், இந்த தமிழ் அரசியல் கைதிகளை யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா சிறைச்சாலைக்கு எத்வித காலதாமதமும் இன்றி
மாற்றப்படுவதற்கான நடவடிக்கைகளை நீதி அமைச்சர் உடனடியாக எடுப்பாரா?
4. முன்னைய அரசாங்கங்களை போலவே, இந்த அரசாங்கமும் பயங்கரவாத தடைச் சட்டம் கொடூரமான இயல்புகளை கொண்டுள்ளது என்பதை ஏற்றுள்ளதன் அடிப்படையிலும், இந்த கொடூரமான பயங்கரவாதத் தடைசட்டமானது, ஏற்றுக் கொள்ளப்பட்ட சர்வதேச மனித உரிமை நியமங்களின் அடிப்படையிலும் உரிய நடைமுறைகளின் அடிப்படையிலும் வடிவமைக்கப்பட்டு இருந்தால், எந்தவொரு தமிழ் அரசியல் கைதிகளும் தடுத்து வைக்கப்பட்டிருக்க மாட்டார்கள்
என்பதையும் கருத்தில் கொண்டு, இந்த பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்க, இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா?”