கண்கண்ட சாட்சியமாக ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவது என்று இந்த நாட்டின் அதி உத்தம ஜனாதிபதி கூறுவது நியாயமா? அப்படியென்றால் கைது செய்யப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டு விட்டார்களா? ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
உள்ளக விசாரணைகளை மேற்கொள்கின்றோம் என்பது நீதியான விசாரணை அல்ல. சகல கொலைகளையும் இந்த அரசாங்கம் செய்துவிட்டு அரசாங்கமே விசாரிப்பது என்றால் அதில் என்ன நியாயம் உள்ளது.ஆகவே சர்வதேச விசாரணையாக அது அமைந்து இந்த நாட்டில் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் சபையில் வலியுறுத்தினார்.
இந்த நாட்டில் நீதியை நிலை நாட்டுகின்றோம், பொறுப்புக் கூறுகின்றோம் என தற்போதைய ஜனாதிபதியின் அண்ணன் மஹிந்த ராஜபக்ஸ சர்வதேசத்திற்கு கூறினார்.ஆனால் இன்றுவரை எதுவும் இடம்பெறவில்லை.ஆகவே இந்த நாடு மிக மோசமான திசையில் கொண்டு செல்லப்படுகின்றது எனக் கூறிய அவர்,
பான்கீன் மூன் இருந்த காலத்தில் எமது மக்கள் கும்பிட்டு கையேந்தி தம்மை விட்டு போக வேண்டாம் என கேட்டனர். எங்களை இந்த அரசாங்கம் கொலை செய்யப் போகின்றது என கேட்டுக் கொண்டனர்.ஆனால் ஐக்கிய நாடுகள் சபை எங்களை நடுத் தெருவில் விட்டுச் சென்றது. ஆகவே இதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரம் பெற்ற ஒவ்வொரு பன்னாட்டு நிறுவனங்களும் பொறுப்புக்கூற வேண்டும்.உண்மைகளை ஆராய வேண்டும்.அதற்காகவே சர்வதேச ரீதியில் வெளிப்படையான விசாரணை ஒன்று இடம்பெற வேண்டும் என கேட்டு நிற்கின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.