பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த 12 தமிழ் இளைஞர்கள் கொழும்பு மறியல் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதம் 29 ஆம் திகதி இவர்கள் நிர்வாணமாக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் பாராளுமன்றத்தில் குற்றஞ்சாட்டினார்.
இவர்கள் 541 நாட்கள் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரின் விசாரணையின் கீழ் மிக கொடூரமான நடத்தப்பட்டுள்ளனர் எனவும், அவர்களிடம் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் ஊடாக வாக்குமூலம் பெற வேண்டும் என்ற போதும் அவ்வாறு இன்றியே வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த 12 ஆம் திகதி அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்றிருந்த இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, சிறைச்சாலையில் இருந்த தமிழ் அரசியல் கைதிகளை ஓரிடத்திற்கு வருமாறு அழைத்து, அவருக்கு முன்பாக முழந்தாளில் இருக்குமாறு கட்டளையிட்டு, அச்சுறுத்தி அவர்களின் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டியுள்ளார். அதன்போது அவர், ஜனாதிபதி எனக்கொரு அதிகாரத்தை வழங்கியுள்ளார்.அதன்படி விரும்பினால் உங்களை விடுதலை செய்யலாம்.அல்லது சுட்டுக்கொல்லலாம் என்று கூறியுள்ளார்.அவ்வாறு துப்பாக்கி வைத்து வெறியாட்டத்தை அவர் நடத்தியுள்ளார் எனவும் அவர் சபையில் கூறியுள்ளார்.
லொஹான் ரத்வத்த செய்த தவறுக்கு அவருக்கு வழங்கப்பட்டுள்ள ஏனைய இராஜாங்க அமைச்சு பதவிகள் நீக்கப்படவில்லை. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.அவரின் அனைத்து பொறுப்புகளும் பறிக்கப்பட்டு, அவரின் எம்.பி.பதவியும் நீக்கப்பட வேண்டும். அத்துடன் அவரை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சபையில் வலியுறுத்திய அவர்,
12 ஆம் திகதி சம்பவம் நடைபெற்ற நிலையில் 18 ஆம் திகதியே சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதுடன், அந்த 6 நாட்களும் விசாரணைகளை தடுத்தவர்கள் யார் என்ற கேள்விகள் எழுகின்றன எனவும் கூறியுள்ளார்.