
ஜனாதிபதி பாதுகாப்பு செயலாளராக பணியாற்றிய போது, அவருடைய இராணுவத்தில் சரணடைந்த பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு என்ன நடந்தது என உறவினர்கள் தேடிக் கொண்டிருக்கும் நிலையில், காணாமல் போனோருக்கு மரண சான்றிதழை வழங்குவதாக ஜனாதிபதி கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஐ.நா. பொதுச் செயலாளரை சந்தித்த போது, காணாமல் போனோருக்கு மரணச் சான்றிதழை வழங்குவதாக கூறியுள்ள கருத்தை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேபோல், இந்த அரசாங்கம் கடந்த செப்டம்பர் மாதத்தில் பயங்கரவாத சட்டத்தை நீக்குவோம் என ஜெனிவாவில் வாக்குறுதியளித்திருந்தது. ஆனால் அந்தப் பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படவில்லை.அதனை நீக்க வேண்டும் என ஐ.நா. சபையிலும் கூறப்பட்டுள்ளது. இன்னும் அந்த சட்டத்தின் கீழ் நபர்கள் தடுத்து வைத்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் எனவும் அவர் பாராளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.