ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ புலம்பெயர் தமிழ் மக்களுக்கு விடுத்துள்ள அழைப்பு என்பது நிச்சயமாக ஒரு முற்போக்கான நடவடிக்கை என்று உலகத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
மேலும் ஜனாதிபதியின் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ள உலகத் தமிழர் பேரவை, அவருடைய இந்த திடீர் மனமாற்றத்துக்கு காரணம் என்ன எனவும் கேள்வியெழுப்பியுள்ளது.
இலங்கையில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்திப்பதற்கு பல தடவைகள் முயற்சிகளை எடுத்த போதும், அந்த சந்திப்பு ஏதோவொரு வகையில் சாக்குப் போக்குகளுடன் ஒத்திவைக்கப்பட்டு வரும் நிலையில், தற்பொழுது நியூயோர்க்கில் இருந்து புலம்பெயர் தமிழர்களை பேச்சுக்கு வருமாறு அழைப்பு விடுத்திருக்கிறார்.
ஆறு மாதங்களுக்கு முன்பு, அதாவது மார்ச் மாதம் ஜனாதிபதி கோட்டாபயவின் அரசாங்கம் உலகத் தமிழர் பேரவை உட்பட சில அமைப்புகளையும் சில தனி நபர்களையும் தடை செய்து அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
ஆனால்,மேற்படி தடை உத்தரவு, இலங்கை மக்களுடனான உலகத் தமிழர் பேரவையின் ஈடுபாட்டை நிறுத்தவில்லை. சமீபத்தில் கூட, கொவிட் -19 தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில், நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் மாத்திரமல்லாமல், முழு இலங்கைக்கும் உதவ பல மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை நாங்கள் வழங்கியிருந்தோம்.
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த காலத்தில் இரண்டு முறை லண்டனிலும் (2015/2018) ஒரு முறை பேர்லினிலும் (2016) உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதிகள் சந்தித்திருந்தோம்.
எங்கள் மக்களின் பிரச்சினைகள் மற்றும் இலங்கையில் வாழும் அனைத்து மக்களின் பிரச்சினைகளையும் தீர்க்க முடியுமாகவிருந்தால் நாங்கள் யாருடனும் பேசத் தயாராக இருக்கின்றோம்.
மேலும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் 30/1 இல் கூறப்பட்டுள்ளவாறு நீதித்துறை எவ்வாறு செயற்படவேண்டுமென்பது சம்பந்தமாக விவாதித்தால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைவோம் என உலகத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.