
மன்னார், முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சிலாபத்துறை புதுவெளி பகுதியில் உள்ள முஸ்லிம் மையவாடியில் கரப்பந்தாட்ட மைதானமொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமைக்கு அப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் விசனம் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம், குறித்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறு கோரி முசலி மஸ்ஜிதுத் தக்வா ஜும் ஆப் பள்ளிவாசல் நிர்வாகம் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளனர்.
முசலி மஸ்ஜிதுத் தக்வா ஜும் ஆப் பள்ளிவாசலுக்கு சொந்தமான சுமார் 2 ஏக்கர் காணியில் பாலர் பாடசாலை, பள்ளிவாசல், மையவாடி போன்றவை அமைந்துள்ளது.
எனினும் மையவாடிக்கு என ஒதுக்கப்பட்ட காணிக்குள் கரப்பந்தாட்ட மைதானம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதோடு, ஆரம்ப கட்ட பணிகள் இடம்பெற்று வருகின்றது.
குறித்த விளையாட்டு மைதானம் அமைக்கும் நடவடிக்கைக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள போதும், உரிய அதிகாரிகள் விளையாட்டு மைதானத்தை மையவாடி பகுதியில் அமைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
எனவே விளையாட்டு மைதானம் மையவாடி பகுதியில் அமைக்கப்படுவதை நிறுத்தி வேறு இடத்தில் அமைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முசலி மஸ்ஜிதுத் தக்வா ஜும் ஆப் பள்ளிவாசல் நிர்வாகம் அரசாங்க அதிபரிடம் கோரிக்கை முன் வைத்துள்ளது.
இதேவேளை, ‘இவ்விடயம் தொடர்பாக முசலி பிரதேச செயலாளரின் கவனத்திற்கு கொண்டு வந்ததோடு, ஆராய்ந்து துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதேச செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்’ என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி. மெல் தெரிவித்துள்ளார்.