November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சுற்றுலாப் பயணிகளை பாதிக்கும் சுகாதார வழிகாட்டுதல்களை புதுப்பிக்க நடவடிக்கை

கொரோனா வைரஸ் காரணமாக பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நாடுகளின் சிவப்புப் பட்டியலில் இருந்து இலங்கையை நீக்குவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதன் முதல்கட்டமாக சுற்றுலாப் பயணிகளைப் பாதிக்கும் சுகாதார வழிகாட்டுதல்களை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் திட்டம் குறித்து சுற்றுலா மேம்பாட்டு ஆணைய அதிகாரிகளுடன், சுற்றுலா ஹோட்டல் முகாமைத்துவ பயிற்சி நிறுவனத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜேர்மனி, கனடா, ஸ்பெயின், சீனா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் இன்னும் இலங்கைக்கு பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இலங்கையில் அண்மைக்காலமாக வேகமாக பரவி வருகின்ற கொரோனா வைரஸை கருத்தில் கொண்டு குறித்த நாடுகள் இவ்வாறு பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால், பயணக் கட்டுப்பாடுகளை விதித்த நாடுகளின் சிவப்புப் பட்டியலில் இருந்து இலங்கையை நீக்குவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அத்துடன், இது தொடர்பாக இராஜதந்திர மட்டத்தில் ஏற்கனவே கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி அந்தந்த நாடுகளின் அரச தலைவர்கள், சுகாதாரம் மற்றும் சுற்றுலா அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

இதனிடையே, மேலே குறிப்பிட்ட நாடுகளில் உள்ள பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக இலங்கைக்கு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் தடைகள் இருப்பதாகவும், நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள சில சுகாதார வழிகாட்டுதல்கள் நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தியுள்ளதாகவும் சுற்றுலா ஊக்குவிப்பு பணியக அதிகாரிகள் அமைச்சருக்கு இதன்போது சுட்டிக்காட்டினர்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடி சுற்றுலாப் பயணிகளை பாதிக்கும் சுகாதார வழிகாட்டுதல்களை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

அத்துடன், நாட்டில் கொவிட் தடுப்பூசி திட்டம் தொடங்குவதற்கு முன்பு சுற்றுலாத்துறைக்காக தயாரிக்கப்பட்ட சில சுகாதார வழிகாட்டுதல்களை புதுப்பிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் சுகாதார அமைச்சரிடம் சுட்டிக்காட்டினர்.

உலகின் பல நாடுகள் ஏற்கனவே சுற்றுலாத் தொழிலை ஆரம்பித்துள்ளதாகவும், கொரோனா தொற்று நோயிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கும், சுற்றுலாத் தொழிலை நடத்துவதற்கும் சுகாதார வழிகாட்டுதல்களை புதுப்பிக்க சுகாதார அதிகாரிகள் ஒப்புக் கொண்டதாக அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.