November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தொற்று; 83 பேர் குணமடைந்தனர்

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப்பெற்று வந்த 83 பேர் இன்று முழுமையாக குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3644 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை தொற்றுக்கு உள்ளான 309 பேர் நேற்று இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் 188 பேர் பேலியகொட மீன்பிடி சந்தையுடன் தொடர்புடையவர்கள் ஆவர்.

பேலியகொட மீன் சந்தையில் இனங்காணப்பட்ட 188 பேரில் கொழும்பைச் சேர்ந்த 79 பேரும், களனியைச் சேர்ந்த 53 பேரும், வத்தளை மற்றும் களுபோவில பகுதிகளைச் சேர்ந்த 09 பேரும், தெமட்டகொடையைச் சேர்ந்த 15 பேரும், கடவத்தையைச் சேர்ந்த 7 பேரும், கிரிபத்கொடையைச் சேர்ந்த 3 பேரும், மொரட்டுவ பகுதியைச் சேர்ந்த 3 பேரும், கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 4 பேரும், வெல்லம்பிட்டியவைச் சேர்ந்த 9 பேரும் உள்ளடங்குகின்றனர்.

இது வரையில் இலங்கையில் 6287 பேர் தொற்றாளர்களான அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் 3644 பேர் குணமடைந்துள்ளதுடன், 2629 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்றுகின்றனர்.

தொற்றுக்கு உள்ளான இளைஞன் தப்பியோட்டம்

கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கொஸ்கம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 26 வயது இளைஞர் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தார்.

காலை 6 மணியளவில் அங்கிருந்து தப்பிச் சென்ற இளைஞன் பொரளை-சஹஸ்புர பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு தொகுதியில் 13ஆவது தொடர்மாடி வீட்டிலிருந்த போது கைதுசெய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த இளைஞர் சென்ற இடங்கள் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இவர் கொஸ்கம பொது வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்று அவிசாவளை பிரதான வீதியை அடைந்து தொலைதூர பயணிகள் பேருந்தில் ஒருகொடவத்தையை நோக்கிப் பயணித்துள்ளார்.

அங்கிருந்து தனது வீட்டுக்குச் சென்றுள்ள அவர் சைக்கிள் மூலம் பொரளைக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பேருவளை மீன்பிடித் துறைமுகம் மூடப்பட்டது

பேருவளை மீன்பிடித் துறைமுகத்தில் 20 மீனவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

பேலியகொட மீன் விற்பனை நிலையத்தில் தொடர்ந்தும் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதை தொடர்ந்து நாடு முழுவதிலும் உள்ள மீன் விற்பனை நிலையங்கள் பல மூடப்பட்டுள்ளன.

இதற்கமைய பேருவளை மீன்பிடித் துறைமுகத்தில் சுமார் நூறு மீனவர்களுக்கு நேற்று பிசீஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், அவர்களில் 20 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து அந்த மீன்பிடித் துறைமுகத்தை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மீனவர்களும் அவர்களின் குடும்பத்தவர்கள் 700 பேரும் இன்று பிசீஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுத்தப்பட்டுள்ளனர்.

வாகனங்கள் தொடர்பில் விசேட கண்காணிப்பு

மலையக வீதிகளில் போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபடும் பேருந்து, முச்சக்கரவண்டி உள்ளிட்ட வாகனங்களில் சுகாதார நடைமுறைகளை உரிய வகையில் பின்பற்றப்படுகின்றனவா என்பது தொடர்பில் கண்காணிக்கப்படுகின்றது.

லிந்துலை பொலிஸார் மேற்கொள்ளப்பட்ட இந்த கண்காணிப்பு நடவடிக்கையில், சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத சாரதிகள், நடத்துனர்கள், பயணிகள் ஆகியோர் எச்சரிக்கப்பட்டனர்.

தலவாக்கலை, நுவரெலியா, நுவரெலியா – ஹட்டன், கதிர்காமம், தலவாக்கலை – டயகம, தலவாக்கலை – எல்ஜின் ஆகிய பகுதிகளுக்கு சேவையில் ஈடுபடும் வாகனங்களே இவ்வாறு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

மீன் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டன

பேலிகொடை மீன் சந்தையில் மீன்களை கொள்வனவு செய்து விற்பனை செய்யப்பட்டதாக அடையாளம் காணப்பட்ட மீன் விற்பனை நிலையங்கள் ஹட்டன் மற்றும் தலவாக்கலை – லிந்துலை நகரசபையினால் இன்று மூடப்பட்டுள்ளன.

அதேபோல், ஹோமாகம பிரதேச சபைக்கு சொந்தமான சந்தை தொகுதியில் மீன் விற்பனை நிலையத்தின் உரிமையாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, குறித்த விற்பனை நிலையம் மூடப்பட்டுள்ளது.

அத்துடன், தொற்றுக்கு உள்ளான உரிமையாளரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் விற்பனை நிலையத்தின் 17 ஊழியர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக ஹோமாகம சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள பகுதிகளில் மருந்துப் பொருட்களை இணையத்தளம் ஊடாக விநியோகிக்க மீண்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.