July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘புலம்பெயர் தமிழ் அமைப்புகள் அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ள சதி’: லொஹான் ரத்வத்த

தான் குற்றம் புரியவில்லை என்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ள சதித் திட்டமொன்றை அரங்கேற்றியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.

முன்னாள் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மீது அரசியல் கைதிகளை அச்சுறுத்திய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், அவர் குற்றச்சாட்டுக்களுக்குப் பதிலளிக்கும் போதே, இதனைத் தெரிவித்துள்ளார்.

தான் குறைபாடுகளைக் கேட்டறிந்துகொள்வதற்காகவே தமிழ் அரசியல் கைதிகளைச் சந்தித்து, உரையாடியதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.

“அனுராதபுரம் சிறைக்கு நான் சென்றதும் தமிழ் அரசியல் கைதிகளுடன் உரையாடியதும் உண்மை. இதன்போது தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்பதை ஆராய்ந்து பார்த்தேனே தவிர, அவர்களை ஓருபோதும் அச்சுறுத்தி சித்திரவதைக்கு உற்படுத்தவில்லை.

எனினும், புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் மூலமாக அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளும் சதித்திட்டமொன்று அரங்கேறியுள்ளது.

இந்த விடயத்தை விசாரித்து, ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ எந்தத் தீர்மானமும் எடுக்க முடியும். ஆனால், நான் குற்றவாளி என்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.

சிறைச்சாலைகள் தீப்பிடிக்கும் மிக மோசமான கட்டத்தில் இருக்கும் போதே, தான் அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்று, பின்னர் நிலைமைகளை முழுமையாக சீர்செய்தேன்”

என்று லொஹான் ரத்வத்த சுட்டிக்காட்டியுள்ளார்.

தான் ஒரு பெண்ணுடன் மதுபோதையில் சிறைச்சாலைக்குச் சென்றதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாகவும், அவை உண்மைக்குப் புறம்பானவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறைக்குள் செல்லும் போது ஆயுதங்களை மாத்திரமன்றி கையடக்கத் தொலைபேசியைக்கூட கொண்டுசெல்ல முடியாது என்றும், தான் துப்பாக்கி கொண்டு சென்றதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை மறுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனிவா விவகாரம் மற்றும் ஜனாதிபதியின் அமெரிக்க விஜயம் போன்றன இடம்பெறும் நிலையில் அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் நெருக்கடிக்குள் தள்ளக்கூடாது என்பதற்காகவே பதவி விலகியதாகவும் லொஹான் ரத்வத்த குறிப்பிட்டுள்ளார்.