November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“யுத்த குற்றச்சாட்டுகளிலிருந்து இராணுவத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கின்றோம்”: அமைச்சர் தினேஷ் குணவர்தன

கடந்த ஆட்சியின் போது ஜெனிவாவில் இலங்கையின் இணை அனுசரணையுடன் கொண்டுவந்த பிரேரணையை நீக்கி, யுத்த குற்றச்சாட்டுகளில் இருந்து எமது இராணுவத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

இந்த விடயம் குறித்து இலங்கை வரவிருக்கும் அமெரிக்க இராஜாங்க செயலாளரிடம் வலியுறுத்தவுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வாவிற்கு அமெரிக்கா விதித்துள்ள பயணத்தடையை நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சஜித் பிரேமதாஸவினால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்குப் பதில் அளித்த போதே வெளிவிவகார அமைச்சர் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.

மேலும், “இராணுவத் தளபதிக்கு அமெரிக்கா விதித்துள்ள பயணத்தடையை நீக்க நாம் ஆரம்பத்திலேயே நடவடிக்கைகளை முன்னெடுக்க ஆரம்பித்துவிட்டோம்.இது குறித்த அதிகார மட்ட பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அமெரிக்க இராஜாங்க செயலகத்திற்கும் இதனை நாம் அறிவித்துள்ளோம்.

எனினும் இவ்வாறான நிலைமை ஏற்பட கடந்த அரசாங்கமே காரணம், அவர்கள் ஜெனிவாவிற்கு சென்று இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்க தீர்மானம் எடுத்ததன் விளைவாகவே இந்த நெருக்கடிகள் ஏற்பட்டன”- எனவும் அவர் சபையில் தெரிவித்தார்.