July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உள்ளகப் பொறிமுறையில் தீர்வுகாண புலம்பெயர் தமிழருக்கு ஜனாதிபதி கோட்டாபய அழைப்பு

உள்ளகப் பொறிமுறையினூடாக பிரச்சினைகளைத் தீர்க்கும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ புலம்பெயர் தமிழருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஐநா செயலாளர் நாயகத்துடன் நடைபெற்ற சந்திப்பின் போது, ஜனாதிபதி இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கையில் 30 வருட காலமாக நிலவிய யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததன் பின்னர் ஏற்பட்ட இடைநிலைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக எடுத்த நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி, ஐநா செயலாளர் நாயகத்திடம் விரிவாகத் தெளிவுபடுத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்டோருக்கு நட்டஈடு வழங்கல், காணிகளை மீளக் கையளித்தல் மற்றும் 2009 ஆம் ஆண்டில், மகிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழ் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்ட பாரிய அபிவிருத்திகள் மற்றும் வடக்கு மாகாண சபைக்கான உறுப்பினர்களை ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுப்பதற்காக ஏற்படுத்திக்கொடுத்த வாய்ப்பு தொடர்பிலும் ஜனாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்.

காணாமற்போனோர் தொடர்பில், அரசாங்கம் என்ற ரீதியில் எடுக்கக்கூடிய நடவடிக்கைகளை விரைவில் முன்னெடுப்பதாகவும் மரணச் சான்றிதழ்களை வழங்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதாகவும் ஐநா செயலாளரிளிடம், ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த இளைஞர்களில் பலரை, தான் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் விடுவித்ததாகவும், விடுவிக்க முடியாத ஏனையோர் தொடர்பான வழக்கு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு வருவதாகவும் கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் தொடர்பிலான சட்ட செயற்பாடுகள் முடிவடைந்த பின்னர், நீண்ட காலம் தடுப்பில் இருந்ததைக் கருத்திற்கொண்டு, ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் பேரில் அவர்களை விடுவிப்பதற்குத் தான் தயங்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

“இலங்கைக்குள் மிகவும் பலமான முறையில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதே என்னுடைய இலக்கு. போராட்டக்காரர்கள் மீது முன்னரைப் போன்று தடியடி, நீர்த்தாரைத் தாக்குதல் போன்றவற்றை நடத்த என்னுடைய ஆட்சியின் கீழ் அனுமதியில்லை. போராட்டக்காரர்களுக்கென்றே எமது அலுவலகத்துக்கு முன்னால் தனி இடமொன்றும் ஒதுக்கப்பட்டுள்ளது.

நாட்டுக்குள் அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக நாம் சிவில் அமைப்புகளுடன் இணைந்து செயற்படுகிறோம்.

இலங்கையின் உள்ளகப் பிரச்சினைகள், நாட்டுக்குள்ளேயே உள்ளகப் பொறிமுறையினூடாகத் தீர்க்கப்பட வேண்டும். அதற்காக, புலம்பெயர் தமிழர்களுடனான பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கிறேன்” என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்றுப் பரவலுக்கு மத்தியில் இலங்கையின் கல்வி மற்றும் பொருளாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள பாரிய அச்சுறுத்தல்கள் தொடர்பில் தீர்க்கமான முறையில் எடுத்துரைத்துள்ள ஜனாதிபதி, தொற்றுப் பரவலை வெற்றிகரமாக எதிர்கொள்ள உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கி வரும் ஒத்துழைப்புகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சனத்தொகையில் அரைவாசிக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி, நவம்பர் மாத இறுதிக்குள் 15 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையுடன் இலங்கை எப்போதும் மிக நெருக்கமாகப் பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் நாட்டுக்குள் மீண்டும் பிரிவினைவாதம் ஏற்பட இடமளிப்பதில்லை என்றும் அவர் ஐநா செயலாளர் நாயகத்திடம் உறுதியளித்துள்ளார்.