ஐநாவின் உயர்ந்தபட்ச ஒத்துழைப்பை இலங்கைக்கு வழங்குவதாக ஐநா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ் உறுதியளித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நடைபெற்ற சந்திப்பில் ஐநா செயலாளர் நாயகம் இவ்வாறு உறுதியளித்துள்ளார்.
இனங்களுக்கு இடையில் ஒற்றுமையை வளர்த்துக்கொண்டு முன்னோக்கிச் செல்லும் பயணத்துக்கு தாம் ஒத்துழைப்பதாகவும் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
நாடுகளுக்கு இடையிலான பாராளுமன்ற சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி 1978 ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்த நினைவுகளையும் ஐநா செயலாளர் நாயகம், ஜனாதிபதி கோட்டாபயவுடன் மீட்டியுள்ளார்.
தான் ஐநா அகதிகள் தொடர்பாக ஆணையாளராக இருந்த போது இலங்கை விடயத்தில் பணியாற்றியதையும், அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவைத் சந்தித்ததையும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.
30 வருட யுத்தம் காரணமாக பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்தாலும், இலங்கை இந்து சமுத்திர பிராந்தியத்தில் பெரும் சமூக மற்றும் பொருளாதார செயற்பாட்டை முன்னெடுப்பதாகவும், அது தொடர வேண்டும் என்றும் அன்டோனியோ குட்டரெஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.