File Photo
இலங்கை சிறைச்சாலைகளிலுள்ள கைதிகள் 89 பேர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
செப்டம்பர் 12 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்ட தேசிய சிறைக் கைதிகள் தினத்தையொட்டி, செப்டம்பர் 19 ஆம் திகதி இவர்களுக்கு விடுதலை வழங்கப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி சிறிய குற்றங்கள் தொடர்பில் தண்டனை வழங்கப்பட்டிருந்த கைதிகளே விடுதலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹர சிறைச்சாலையில் இருந்து 10 கைதிகளும், போகம்பரை சிறைச்சாலையில் இருந்து 7 கைதிகளும், வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து 5 கைதிகளும் இவர்களிடையே அடங்குவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்தில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொது மன்னிப்பை வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடந்த வாரத்தில் ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.