January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

போதையில் பெற்றோலை ஊற்றிய கணவன் மரணம்; மனைவி வைத்தியசாலையில் அனுமதி

யாழ். அல்லைப்பிட்டியில் மது போதையில் தற்கொலை செய்ய தனக்குத் தானே பெற்றோல் ஊற்றிய போது அருகிலிருந்த அடுப்பில் பெற்றோல் பாய்ந்து நெருப்பு பற்றியதால் கணவன் உயிரிழந்ததோடு, மனைவி எரிகாயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது அல்லைப்பிட்டியைச் சேர்ந்த 48 வயதுடைய சோமசேகரம் ரவிச்சந்திரன் என்னும் 10 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தார்.

இவர் மதுபோதையில் உடன் பிறந்த சகோதரரை திட்டிப் பேசியுள்ளார்.இதன் போது சகோதரனும் திரும்பித் திட்டிப் பேசியதால் சகோதரன் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இதனால் சகோதரன் கையில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

சகோதரனை தாக்கி விட்டேன் எனக் கூறியவாறு அதன் கவலையில் தனக்குத் தானே பெற்றோல் ஊற்றிய வேளை அருகில் மனைவி சமையலில் ஈடுபட்டிருந்த போது பெற்றோல் சமையல் அடுப்பில் ஊற்றப்பட்டு பற்றி எரிந்தமையால் சமையலில் ஈடுபட்டிருந்த மனைவி மீது நெருப்பு பற்றிக் கொண்டது.

மனைவியில் பற்றிய நெருப்பு கணவர் மீதும் பற்றிய நிலையில், உடனடியாக இருவரையும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்த போதும் ஒரு மணி நேரத்துக்குள் கணவர் உயிரிழந்தார். மனைவி தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.

உயிரிழந்தவரின் மரண விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.