November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரசாங்கத்திடம் பணம் இருக்கிறது; ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

அரசாங்கத்திடம் பணம் இருக்கிறது.பணமில்லாவிட்டால் வீட்டிலிருந்து வேலை செய்யும் அரச ஊழியர்களுக்கு எவ்வாறு சம்பளம் வழங்க முடியும் என ஆளும் தரப்பு பிரதம கொறடாவும் நெடுஞ்சாலை அமைச்சருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் ‘சௌபாக்கிய நோக்கு’கொள்கை பிரகடனத்தின் படி வீதிகளின் இருபுறமும் ஒரு மில்லியன் மரக்கன்றுகளை நடுவதற்கு முதலில் முடிவு செய்திருந்தோம்.ஆனால் நாங்கள் இப்போது அதை இரண்டு மில்லியனாக அதிகரித்துள்ளோம். ஒரு இலட்சம் கிலோமீட்டர் வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படும். வீதியின் இருபுறமும் மரம் நடும் பசுமை கருத்திட்டத்தின் கீழ் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையில் மர நடுகை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.பாமன்கடை வீதியின் இருபுறமும் மரங்களை நடும் பணியை ஆரம்பித்துள்ளோம்.சிலர் இதுபோன்ற நிகழ்ச்சிகளைப் பார்க்க விரும்புவதில்லை.கண்டும் காணாதது போன்று இருப்பர். இதுதான் நம் நாட்டில் உள்ள எதிக்கட்சியாகும்.

லங்காகம வீதி அமைக்கப்படும்போது சிங்கராஜாவில் உள்ள அனைத்து மரங்களும் வெட்டப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டது. ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் காடழிப்பு இடம்பெறுகிறதா என்று காண ஜனாதிபதி லங்காகமவுக்கு நேரில் சென்றார்.இன்று அந்த வீதியின் வேலை முடிந்துவிட்டது.இப்பகுதியில் வசிக்கும் மக்களின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த முடிவையும் எங்கள் அரசு எடுக்காது.சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு பயனளிக்கும் வகையில் இந்த அபிவிருத்திப் பணிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.அதனால் இன்று எதிர்க்கட்சிகள் கூறியவை அனைத்தும் முற்றிலும் பொய்யாகிவிட்டன.அவ்வப்போது ஏதாவது கருத்தை உருவாக்குவது தான் எதிர்க்கட்சிகளின் முக்கிய பங்காக இருக்கிறது.

தேர்தலை நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் விடுத்த கோரிக்கை குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,

தேர்தல் ஒன்று நடந்தால் எதிர்க்கட்சித் தலைவரின் நிலையை நன்றாக அறிந்து கொள்ள முடியும்.ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் பொதுத் தேர்தலை நடத்த வேண்டாம்,பாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டும் என்று சவால் விடுத்த தலைவர் தான் இந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் வரை,அது எங்கள் அரசுக்கு நல்லது. எனவே,சஜித் பிரேமதாச எதிர்க்கட்சித் தலைவராகவும் தற்போதைய அரசாங்கம் ஆட்சியிலும் இருக்கும் வரை நம் நாட்டு மக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.எனவே,சஜித் பிரேமதாச சொல்பவை வெறும் அரசியல் வார்த்தைகள் மாத்திரமே.அந்த வார்த்தைகளின் அர்த்தத்தில் எந்த உள்ளடக்கமும் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.