November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘போதைப் பொருள் கடத்தல் வலையமைப்புக்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது’; பாதுகாப்பு செயலாளர்

போதைப் பொருள் கடத்தல் வலையமைப்புக்கு இலங்கைக்குள் எந்த விதத்திலும் இடமளிக்கப்படமாட்டாது என பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

போதைப் பொருள் ஒழிப்புக்காக முப்படை மற்றும் சட்ட அமுலாக்க பிரிவினர் தொடர்ந்து இதே போன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள் எனவும் பாதுகாப்பு செயலாளர் உறுதிப்படுத்தினார்.

கடற்படை,பொலிஸ் புலனாய்வு பிரிவுடன் ஒன்றிணைந்து இலங்கையின் தெற்கே உள்ள சர்வதேச கடற்பரப்பில்,1,575 மில்லியன் ரூபா பெறுமதியான சுமார் 170 கிலோ கிராமிற்கும் மேற்பட்ட ஹெரோயின் போதைப் பொருளை எடுத்துச் சென்ற வெளிநாட்டு மீன்பிடி படகினை கைப்பற்றி கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில்,

மீன்பிடி படகு என்ற போர்வையில் நாட்டின் தெற்கே சுமார் 800 கடல் மைல் (சுமார் 1574 கிலோ மீற்றர்) தொலைவில் உள்ள சர்வதேச கடற்பரப்பில் நங்கூரமிட்டவாறு இருந்த போதைப் பொருள் ஏற்றப்பட்டிருந்த படகே இவ்வாறு கைப்பற்றப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இலங்கையில் போதைப் பொருள் பாவனை இல்லாத சமூகத்தை உருவாக்கும் வகையில் கடற்படை இது போன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

போதைப் பொருள் ஒழிப்புக்காக முப்படை மற்றும் சட்ட அமுலாக்க பிரிவினர் தொடர்ந்து இதேபோன்ற நடவடிக்கைகளை தொடர்ந்தும்முன்னெடுப்பார்கள் என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன(ஓய்வு) உறுதிப்படுத்தியுள்ளார்.

நாட்டிற்குள் சட்டவிரோத போதைப் பொருள் கொண்டு வரப்படும் அனைத்து மார்க்கங்களும் புலனாய்வு பிரிவினரின் ஒருங்கிணைந்த முயற்சிகளுடன் மேலும் கட்டுப்படுத்தப்படும் எனவும் பாதுகாப்பு அமைச்சு வலியுறுத்தியுள்ளது.