கெரவலப்பிட்டிய அனல் மின்நிலையத்தின் ஒரு பகுதியை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் அரசாங்கம் இரகசியமான முறையில் கையெழுத்திட்டுள்ளதாக ஜேவிபி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 17 ஆம் திகதி நள்ளிரவு 12.06 மணியளவில் இலங்கை அரசாங்கமும், அமெரிக்க நிறுவனமும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர், இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
கெரவலப்பிட்டிய மின்நிலையத்தின் எரிவாயு களஞ்சிய கட்டமைப்பு மற்றும் குழாய் கட்டமைப்பை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதற்காக இந்த ஒப்பந்தத்தின் ஊடாக நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இதனை ஒருபோதும் தூய்மையான கொடுக்கல் வாங்கலாக பார்க்க முடியாது என்றும், கேள்வி மனுக் கோரல் இன்றி, முறையான அமைச்சரவை பத்திரமும் இன்றியே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
17 ஆம் திகதி நள்ளிரவு ஒப்பந்தத்தை கைச்சாத்திட்ட பின்னர், குறித்த நிறுவனத்தை சேர்ந்தவர் அமெரிக்காவுக்கு சென்றுவிட்டார் என்றும், அதன்பின்னரே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றார் என்றும் ஜேவிபி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க அந்த ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.