சீனாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யவிருந்த சேதன உரத்தில் பாரிய ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடிய இரண்டு பக்றீரியாக்கள் அடங்கியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியை சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
சர்ச்சைக்குரிய சேதன உரத்தின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதே இந்த விடயம் தெரிய வந்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அஜித் பி பெரேரா இதனை தெரிவித்தார்.
இந்த பக்றீரியாக்கள் ஒன்று நாட்டின் விவசாய நடவடிக்கையை முழுமையாக பாதிப்படைய செய்ய கூடியது என தெரிவித்துள்ள அவர்,மற்றொரு பக்றீரியா பிரதானமாக 4 பாரதூரமான நோய்களை மனிதர்களுக்கு ஏற்படுத்தக் கூடியது என்பதோடு, இந்த நோய்களை குணப்படுத்துவதற்கான மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.
இது தொடர்பான அறிக்கை செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி கிடைக்கப் பெற்ற போதும் விவசாய அமைச்சு அதனை நிராகரித்துள்ளது.
நாட்டுக்கு இந்த சர்ச்சைக்குரிய சேதன உரத்தின் 95 000 மெட்ரிக் டொன் இறக்குமதி செய்யப்படவிருந்ததோடு, இதற்காக 63 மில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளதாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா குறிப்பிட்டார்.