January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”இலங்கையில் நிறுவ முயற்சிக்கப்படும் தற்காலிக பொறிமுறைகளை ஏற்க முடியாது”: ஜீ.எல்.பீரிஸ்

மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் நிறுவ முயற்சிக்கப்படும் தற்காலிகமான பொறிமுறைகளை இலங்கையால் ஏற்றுக்கொள்ள முடியாது என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்தப் பொறிமுறையானது ஐநா.சாசனத்தின் ஆவணங்களுக்கு ஏற்ப அமையவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

பொதுநலவாய அமைப்பின் பொதுச் செயலாளர் பட்ரிசியா ஸ்கொட்லேன்ட்டுடன் வீடியோ ஊடாக நடத்தப்பட்ட கலந்துரையாடல் ஒன்றிலேயே ஜீ.எல்.பீரிஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நியூயோர்க் நகரில் இருந்து வெளிவிவகார அமைச்சர் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தார்.

பொதுநலவாய அமைப்பின் ஸ்தாபக உறுப்பு நாடு என்ற வகையில் இலங்கை முன்னெச்சரிக்கையாகவும், அமைப்பின் மதிப்புக்கள், கொள்கைகள் மற்றும் குறிக்கோள்களுக்கு இணங்க அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக அமைச்சர் பீரிஸ் இதன்போது தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய நாடுகளுடன் வணிகம், கல்வி, தொழிற்பயிற்சி மற்றும் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல துறைகளிலான ஒத்துழைப்பை இலங்கை மேலும் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை உள்ளூர் நிறுவனங்கள் தமது ஆணைகளை நிறைவேற்றுவதற்குப் போதுமான அமைப்புக்கள் தேவைப்படுகின்றன. இந்த நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் பணிகளை வெளிப்புற அமைப்புக்களால் மாற்றவோ அல்லது கையகப்படுத்தவோ முடியாது என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில் வர்த்தகம், விளையாட்டு, இளைஞர்கள் மற்றும் வன்முறைத் தீவிரவாதத்தை எதிர்த்தல் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலான இலங்கையின் தொடர்ச்சியான ஒத்துழைப்பை பொதுநலவாய அமைப்பு பாராட்டுவதாக பொதுச்செயலாளர் ஸ்கொட்லேன்ட் இதன்போது தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.