ஐநா கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக, அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நியூயோர்க் நகரை சென்றடைந்துள்ளார்.
அமெரிக்க நேரப்படி, 18ஆம் திகதி பிற்பகல் 2.30 மணியளவில் ஜனாதிபதி, நியூயோர்க் ஜோன் எஃப் கெனடி சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக் குழுவினரை, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி மொஹான் பீரிஸ் வரவேற்றுள்ளார்.
செப்டம்பர் 21ஆம் திகதி, ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடர் ஆரம்பிக்கவுள்ளது.
இந்தக் கூட்டத்தொடர்களில் பங்கேற்பதற்காக, அரச தலைவர்கள் பலரும், நியூயோர்க் செல்கின்றனர்.
50 ற்கும் மேற்பட்ட நாட்டுத் தலைவர்கள் அந்தக் கூட்டத் தொடரில் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரச தலைவர்கள் கூட்டத்தொடரில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் உரையாற்றவுள்ளார்.
இதற்கிடையே, கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ள அரச தலைவர்களுடன், இரு தரப்புக் கலந்துரையாடல்களையும் ஜனாதிபதி மேற்கொள்ளவுள்ளார்.
வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொழம்பகே ஆகியோரும், ஜனாதிபதியுடன் இந்தக் கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ளனர்.