‘நாங்கள் மதுபோதையில், கைத்துப்பாக்கியுடன் வந்து இறங்கவில்லை’ என்று அனுராதபுர சிறைச்சாலை நுழைவாயிலில் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி உறுப்பினர்களான மனோ கணேசன், காவிந்த ஜயவர்தன ஆகியோர் அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளைச் சந்திக்கச் சென்றுள்ளனர்.
தாம் அனுராதபுர சிறைச்சாலைக்குள் செல்ல முற்பட்டபோது ஏற்பட்ட தடைகள் தொடர்பாக மனோ கணேசன் கவலை தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உள்ள சிறப்புரிமைகளை அரசாங்கம் மீறுவதாக மனோ கணேசன் குற்றம்சாட்டியுள்ளார்.
தாம் அனுராதபுர சிறைச்சாலைக்குச் சென்றதில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த சிறைச்சாலைக்குள் மதுபோதையில், துப்பாக்கியையும் எடுத்துச் சென்ற விடயம் உறுதியானதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“சிறைச்சாலை அதிகாரிகள் முறையாக இயங்கியதன் காரணமாகவே துப்பாக்கிப் பிரயோகம் தடுக்கப்பட்டதாக கைதிகள் தெரிவித்தனர்.
நாம் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு இருந்தால், விடுதலைப் புலி உறுப்பினர்கள் தனது துப்பாக்கியைப் பறித்து, துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட பின்னர் தற்கொலை செய்துகொண்டதாக, கதை கட்டியிருப்பார்கள் என்றும் கைதிகள் தெரிவித்தனர்.
தம்மைப் பாதுகாப்பான, வேறு சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யுமாறும் கைதிகள் கேட்டுக்கொண்டனர்.
அதன் பின்னரே, அவர்கள் விடுதலையை எதிர்பார்க்கிறனர்.” என்று மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகள் பயத்துடன் இருப்பதாகவும், அவர்கள் உடல் மற்றும் உள ரீதியாக பலவீனமடைந்துள்ளதாகவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.