இலங்கை முன்னேற வேண்டுமானால், ஐநா மனித உரிமைகள் பேரவையின் குற்றச்சாட்டுகளுக்கு அரசாங்கம் பொறுப்புணர்வுடன் பதிலளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி. அலவத்துவல தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகையை இலங்கை இழந்தபோது, பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டதாகவும், அவ்வாறான நிலைமை மீண்டும் வந்தால், அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
“நாட்டின் பொருளாதாரம் சரிந்து வருகின்றது. அந்நியச் செலாவணி பற்றாக்குறையால் பரிவர்த்தனைகளை முன்னெடுக்க முடியாத நிலை தொடர்கிறது.
அரசாங்கம் வெளிநாட்டு முதலீட்டாளர்களைக் கொண்டுவருவதாகக் கூறுகின்றது. எனினும், பொருளாதாரம் தொடர்ந்து பலவீனமடைந்து வருகிறது.
இலங்கை முன்னேற வேண்டுமானால், ஐநா மனித உரிமைகள் பேரவையின் குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்புணர்வுடன் பதிலளிக்க வேண்டும்” என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி. அலவத்துவல தெரிவித்துள்ளார்.