November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழில் 260 இலட்சம் ரூபாய் செலவில் அபிவிருத்தி திட்டம் முன்னெடுப்பு!

யாழ்.மாவட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சுமார் 260 இலட்சம் ரூபாய் பெறுமதியான வேலைத் திட்டங்களை உடனடியாக ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடற்றொழில் அமைச்சின் களப்பு பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி திட்டத்தின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்படவுள்ள இந்த திட்டத்தின் ஊடாக யாழ்.மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளும் நன்மையடையவுள்ளன.

அந்த வகையில், சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட தனங்கிளப்பு மற்றும் கோவிலாக்கண்டி ஆகிய இடங்களில் மீன்பிடிப் படகுகளை நிறுத்துவதற்கான தரிப்பிடங்கள் சுமார் 57 இலட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படவுள்ளது.

அதேபோன்று, யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட நான்கு இடங்களில் இடி மின்னல் பாதுகாப்பு (இடி தாங்கி) பொறிமுறையினை அமைப்பதற்காக சுமார் 45 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதனைவிட, கொட்டடி நாவாந்துறை மற்றும் கொழும்புத்துறை ஆகிய இடங்களில் அமைந்துள்ள வலை ஒழுங்குபடுத்தும் மண்டபங்களை புனரமைப்பதற்காக சுமார் 119 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் கடற்றொழில் திணைக்களத்தினால் முன்னுரிமை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட இடங்களுக்கு வீதி மின் விளக்குகள் பொருத்துதல் உட்பட சுமார் 17 வேலைத் திட்டங்கள் உடனடியாக ஆரம்பிக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

களப்பு பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி திட்டம் உட்பட கடற்றொழில் அமைச்சின் ஏனைய திட்டங்களும் யாழ். மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பரந்துபட்டளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.