கொவிட் வைரஸ் அச்சுறுத்தல் நிலைமை காரணமாக அடுத்த வாரத்தில் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் மாத்திரம் பாராளுமன்ற அமர்வுகளை நடத்த பாராளுமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாள் மாத்திரமே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கை மீதான பாராளுமன்ற விவாதம் ஒக்டோபர் 4 ஆம் திகதி திங்கட்கிழமையை விசேட பாராளுமன்ற தினமாக ஒதுக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற அமர்வுகளை தீர்மானிக்கும் வகையில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு கூடியது.இதன்போது இரண்டு நாட்கள் மாத்திரம் சபை நடத்தப்படும் என தீர்மானிக்கப்பட்டது.எனினும் பாராளுமன்ற அமர்வுகளை நான்கு நாட்களும் நடத்த வேண்டும் என எதிர்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.
நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில்,அத்தியாவசிய சேவைகள் அனைத்தும் இயங்கும் என அரசாங்கம் கூறுகின்றது.நாட்டின் கட்டமைப்பிற்கு பாராளுமன்றமும் அவசியமான ஒன்று.அவசரகால நிலைமைகள் நடைமுறையில் உள்ள நிலையில் நாட்டின் நிகழ்கால நிலைமைகளை அவதானிக்க பாராளுமன்றத்தை நான்கு நாட்களும் நடத்த வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக ஆகியோர் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனினும் அரசாங்கம் அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை. நாட்டின் நிலைமைகளை கருத்தில் கொண்டு இரண்டு நாட்கள் மாத்திரம் பாராளுமன்றத்தை நடத்த இணங்கியுள்ளனர்.